M.M. அப்துல் ரஹ்மானின்

விளக்கை தேடும் விட்டில் பூச்சி


சுடர் விட்டு இருள் கொல்லும் ​சூரியனை கண்டேன்
இது என் நாயகத்தின் திருவதன பிரகாசம் என்றேன்

பதினைந்தாம் நாள் இரவின் வான்மதியை கண்டேன்
இது என் நாயகத்தின் மாசில்லாத மதிமுகம் என்றேன்

பளிங்கு போல் ஒளி தரும் விண்மீன்களை கண்டேன்
இது என் நாயகத்தின் ஒளி விசும் விழிகள் என்றேன்

காலை பனியில் குளித்த ரோஜா இதழ்களை கண்டேன்
இது என் நாயகத்தின் தேன் சொட்டும் செவ்விதழ்கள் என்றேன்

வெடித்த இலவில் வெளியேறிய மெல்லிய பஞ்சினை கண்டேன்
இது என் நாயகத்தின் அள்ளி வழங்கும் அற்புத கையின் பிஞ்சு விரல்கள் என்றேன்

இன்ப மணம் வீசும் இயற்கையின் கஸ்தூரியை கண்டேன்
இது என் நாயகத்தின் பொன்னுடல் வீசும் வியர்வை மணம் என்றேன்

நினைக்கும்போதே நாவு சுரக்கும் தேன் அமிர்தத்தை கண்டேன்
இது என் நாயகத்தின் சுகந்த வாய் சுரக்கும் இனிய எச்சில் துளிகள் என்றேன்

கடிக்கும்போது இனிமை தரும் சுவைமிகு கற்கண்டினை கண்டேன்
இது என் நாயகத்தின் நறுமண நாவு பேசும் அழகிய வார்த்தைகள் என்றேன்

எவைகளை கொண்டு நான் என் நாயகத்தை புகழ்ந்தேனோ
அவையெல்லாம் என்னை சினம் கொண்டு பார்த்தன

அறிவில்லாத அப்துல் ரஹ்மானே
யாரிடம் இரவல் வாங்கி நாங்களெல்லாம் சிறப்பு பெற்றோமோ,
அந்த மாபெரும் அருட்கொடையை எங்களின் சாதாரண சிறப்பை கொண்டா உவமிக்கிறாய்

கடல் நீரில் இருந்து ஒருதுளி நீர் எடுத்து
அற்பமான அந்த ஒரு துளி நீரை கொண்டு
மாபெரும் கடலுக்கே நீ வரையறை செய்கிறாயா என்று என்னிடம் சீறி பாய்ந்தன

உடனே என் எழுதுகோலை மூடி விட்டேன்
என் நாயகத்தை புகழ நான் ஆயிரம் ஜென்மம்
பிறவி எடுத்துவந்தாலும் அது என்னால் முடியாது என்று கூறியவனாக

அற்பமான விட்டில் பூச்சி நான்....
பேரொளி கொடுக்கும் என் நாயகத்தின் சுடரொளியில் நான் கரிந்து போகிறேன்
இதுவே எனக்கு போதும்
M.M. அப்துல் ரஹ்மானின்

வசந்தகால கண்ணீர்த்துளிகள்


கோடான கோடி மனிதர்களில் என்னை நேசித்த யா ரசூலுல்லாஹ்...

அற்ப உலகம் இந்த பாவியை உங்களை விட்டும் பாரமுகமாக்கியதும் ஏனோ

வசந்த காலத்தில் கண்ணீர் சிந்தும் விழிகளோடு உங்களை புகழ்ந்த என் நாவு, இன்று தாங்க முடியா வேதனை தரும் உள்ளத்தோடு யா ரசூலுல்லாஹ் யா ரசூலுல்லாஹ் என்று கூறி அழுகிறது

வசந்த காலத்தில் உங்கள் கருணையினால் அமுத மழையில் நனைந்த நான், இன்றோ தாங்க முடியா வேதனைகளோடு கண்ணீர் மழையில் நனைகிறேன்.

கவலைகள் என்னும் தலையணையில் படுத்து இரவுப்பகலாக நான் கண்ணீர் விட்டு கொண்டு இருக்கிறேன்
நான் சிந்திய கண்ணீர் துளிகளில் எதாவது ஒரு துளி உங்கள் பாதம் நனைத்து என் தேவையை உங்களிடம் சொல்லாதா...

பாவங்கள் என்னும் மேகங்கள் என்னை சூழ்ந்து கொண்டபோது
கருமை கொண்ட என் உள்ளம், உங்களை மட்டும், உங்கள் அன்பை மட்டும் நம்பி வாழ்ந்தது.

எந்த நன்மைகளும் இன்றி அனாதையாக என் ஆத்மா கலங்கியபோது
என்னை என் நேசர் கரம் பிடித்து காப்பாற்றுவார் என்று தனக்கு தானே ஆறுதல் சொல்லி கொண்டது

உயர இருந்து தாழ்வாக பாயும் அருவி போல் என் மீது சோதனைகள் வந்த வண்ணம் உள்ளன.
பக்தி மார்க்கத்திலே பரம கோழையான நான் தாங்க முடியாமல் தடுமாறி விழுகிறேன்

கரம் பிடித்து என்னை தூக்கி விடுங்கள் என் நாயகமே

எஜமானிடம் உணவு தேடி நிற்கும் நாய், அவர் வீட்டு வாசலில் காத்து நிற்பதை போல்
என் எஜமானரே, உங்களின் நாயாகிய நான் உங்கள் அன்புக்காக காத்து நிற்கிறேன்.

என்னை விட்டும் உங்கள் அழகு திருமுகத்தை திருப்பி விடாதீர்கள் என் நாயகமே.

உங்களை அன்றி என்னை சேர்த்து அணைப்பார் எனக்கு வேறு யாருமில்லை.

உங்களை தவிர இந்த உலகத்தில் எனக்கு எதுவுமே தெரியாது...
எனக்கு எல்லாமே நீங்கள்தான்.



​உங்கள் கவிதைக​ள்

அன்பர்கள் உங்கள் சொந்த கவிதைகளை இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.
​அவை இப்பகுதியில் பிரசுரிக்கப்படும்.  admin@mailofislam.com
"ரசூல் அடிமை" சபிக் சேக் முஹையதீன் சாஹிப்

யா ரசூலுல்லாஹ் உங்கள் திருமுகம் காண ஆவல் கொண்டோம்


ராகம் :ரப்பி வர்ஜுகுணா ஜியரதஹு

எங்கள் உயிரே யாரசுலல்லாஹ்!
உங்கள் திருமுகம் காண ஆவல் கொண்டோம்
உங்கள் திருமுகம் காண ஆவல் கொண்டோம்
ஒருமுறை வருவீர் எஜமானே
(எங்கள் உயிரே )

முழு மதி இல்லா வானம் போல்
எங்கள் வாழ்கை இருளீல் துடிக்கிரதே
உங்கள் முழு மதி முகத்தை
ஒரு தடவை காண வரம் தர வேண்டும் எஜமானே!
நீங்கள் வரம் தர வேண்டும் எஜமானே!
உங்கள் அருள் பெற வேண்டும் எஜமானே
(எங்கள் உயிரே )

ஆதவன் ஒளி முன் பனி உருகும்
உங்கள் பார்வையினால் பாவம் மரையும்
அந்த பார்வையிலே நன்மை பெருகும்
இந்த பாவியை பாருங்கள் எஜமானே!
இந்த பாவியை பாருங்கள் எஜமானே!
உங்கள் பதையில் சேருங்கள் எஜமானே
(எங்கள் உயிரே )

வான் மழையே மன்னின் வளம்
உங்கள் அருள் மழையே அடியான்கு ஜெயம்
உங்கள் திரு கரமே சுவர்கத்தின் வலி
அந்த கரத்தினால் பற்றுங்கள் எஜமானே
அந்த கரத்தினால் பற்றுங்கள் எஜமானே
உங்கள் பாதத்தை முத்தனும் எஜமானே
(எங்கள் உயிரே )

இறையோனே வல்ல ரஹ்மானே
அண்ணல் நபி முகத்தை காணும் நசிபை
எங்கள் உயிர் முகத்தை காணும் நசிபை
நீ தருவாயே வல்ல யா அல்லா
நாங்கள் வேண்டுகிறோம் வல்ல யா அல்லா
எங்கள் வாழ்கை முழுவதும் நபி மீது
ஸலவாத் ஓதும் பாக்கியம் தந்துடுவாய்


சல்லல்லாஹு அலா முஹம்மது
சல்லல்லாஹு அலைஹி வ சல்லம்
சல்லல்லாஹு அலா முஹம்மது
சல்லல்லாஹு அலைஹி வ சல்லம்
சல்லல்லாஹு அலா முஹம்மது
யா ரப்பி ஸல்லி அலைஹி வசல்லிம்


உங்களை யன்றி நபி அன்பை நாங்கள்
எப்படி அடைவோம் எஜமானே
எங்கள் அன்பை நபி இடத்தில்
நீங்கள் சேர்த்திடுங்கள் அப்துல் காதிரே
நீங்கள் சேர்த்திடுங்கள் அப்துல் காதிரே
என்னை பார்த்திடுங்கள் அப்துல் காதிரே
(யா முஹையதீன் ஜிலானி எம்மை ஆண்டருவீர் மகாராசரே
எம்மை ஆண்டருவீர் மகாராசரே அஹ்மத் நபி திரு பேரரே)


உங்கள் கை அப்துல் காதிரிடத்தில்
அப்துல் காதிரின் கை நபி நாதரிடத்தில்
உங்கள் இன்னொரு கையை அடிமைக்கு
நீங்கள் தந்தருள்வீர் எங்கள் எஜமானே
நீங்கள் தந்தருள்வீர் எங்கள் எஜமானே
என்னுள் வந்தடைவீர் எஜமானே
(நாகூரில் யாழும் கோமானே
எங்கள் உள்ளதில் வாழும் எஜமானே
நபி நாதரிடம் சமைந்த சிமானே)


(எங்கள் உயிரே )

The Path to Paradise
குலாம் தஸ்தகீர் எழுதிய

மாநபிக்கு ஒரு மடல்


மதீன மண்ணில் துயில் கொள்ளும் எங்கள் மஹமூதரே! தாங்கள் கண்ட தொல்லைகளும்,கொடுமைகளும்,சமுக அவலங்களும் சொல்லிமாளாது.
சாயம் போன சரித்திர பக்கங்களும் தங்களின் உலர்ந்த உதிர வரலாற்றை காய்ந்திடாமல் இன்னும் வைத்திருக்கிறது
இறையாணை கொண்டு தமக்கு துன்பம் விளைவித்த கொலைகார மக்களை அழிக்க வாய்ப்பு வழங்கிய போதும் "அவர்கள் அறியாதவர்கள் எனக்கூறி அம்மக்களை சபிக்காமல் நேர்வழி பட வழிந்தோடும் குருதி வாய் துடைத்து கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்த தூயோரே! அந்த தூயோனின் இறுதி தூதே!
நாயகமே சகிப்புத் தன்மையின் தாயகமே!
படைப்பினம் அல்லாது படைத்தவனிடம் பாடம் பயின்ற பகுத்தறிவின் பெட்டகமே!
உண்மைக்கு உயிர் தந்த உத்தமரே!
மனித பிறவிகளின் மத்தியில் நீங்கலோர் மனிதநேய பிறவி!
பொறுமையே உங்கள் மீது பொறாமை கொண்டது; பொறாமையோ உங்கள் பொறுமை கண்டு அகன்று சென்றது.
வாய்மையும் தங்களிடம் வாழ்வு தேடியதுவலிமையோ வாஞ்சையுடன் துணை நின்றது.
உங்கள் உருவ படத்தை அறிந்தவர் உலகில் எம்மில் இல்லை. உங்களை அறியாதவர் உலக வரைபடத்தில் எவரும் இல்லை.
கலப்பின உறவு அது வெறும் கனவு என எண்ணி உறங்கிய சமுகத்தை சகோதர வீதியில் கைக்கோர்த்து சமமாய் நடக்க செய்த எங்கள் உயிரே!
உங்கள் உம்மத்தின் இந்த சமுக நிலை அறிவீரோ...?

***
வாளேந்திய சமுகத்தை வாய்மையால் செதுக்கியவர் நீங்கள்
வாயே திறக்க கூடாதென வன்முறையால் கூறுபோடும் சமுகத்தில் நாங்கள்

தீண்டாமையை திக்கற்ற திசைக்கு திருப்பியவர் நீங்கள்
யாரும் தீண்டினால் அவரை தீக்கு இரையாக்கும் தீய சமுகத்தில் நாங்கள்

அநாதைகளுக்கும்அமானிதங்களுக்கும் வரம்பின்றி அடைக்கலம் தந்தவர் நீங்கள்
அமானிதங்களை திரும்ப கேட்போரை வரம்பு மீறி அனாதைகளாக்கும் வஞ்சக சமுகத்தில் நாங்கள்

வட்டியை மூர்ச்சையாக்கி வணிகத்தை வளமுடன் வாழ செய்தவர் நீங்கள்
வணிக வாயடைத்து வட்டியின் வயிறு வளர்க்கும் வழிகெட்ட சமுகத்தில் நாங்கள்

பெண்ணினத்தை பொன்னென எண்ணி பொத்தி வைக்க சொன்னவர் நீங்கள்
பெண்ணையும்,பொன்னையும் வியாபார பொருளாக்கிய விரச சமுகத்தில் நாங்கள்

பெருங்கல்லும் சிரம் பணிய கண்டீர் நீங்கள்
சிறுக்கல்லுக்கு சிரம் பணிய காத்திருக்கும் பெருங்கூட்ட சமுகத்தில் நாங்கள்

தொண்டர்களை ஒழித்து உயிர் கொடுக்கும் தோழர்களை உருவாக்கியவர் நீங்கள்
தொண்டர்களை ஒழித்து உயிர் எடுக்கும் குண்டர்களை உருவாக்கும் கேவல சமுகத்தில் நாங்கள்

பாவத்தின் சாயல் கூட அறியாதவர் நீங்கள்
பாவ முட்டைகளை பொதிகளென சுமக்கும் கழுதை சமுகத்தில் நாங்கள்

உங்கள் நிழல் கூட புகழ் மீது விழ மறுத்த மாமனிதர் நீங்கள்.
புகழ்தரா மக்களை நிழல் கொண்டு அழிக்கும் நீதியற்ற சமுகத்தில் நாங்கள்

எளிமையை தோழானாக்கி,பகட்டை பரதேசியாகிய பகலவன் நீங்கள்
எளிமையை ஏளனம் செய்யும் பதவி மோக சமுகத்தில் நாங்கள்

பெருமை -இறை ஆடை அது வேண்டாம் இங்கே நமக்கு என உரக்க கூறினீர்கள் நீங்கள்

அவ்வாடையை அகங்கார அலமாரியில் அழகாய் அடிக்கி உடுத்தி மகிழும் உதாசீன சமுகத்தில் நாங்கள்

மதீனாமக்கள் பலரை புனிதராக்கியது மாநபி தங்களின் வருகையால் மதீன மண்ணின் புழுதி கூட புனிதமாகியது
எங்கள் இரட்சகனின் தூதர் ரவ்லாவை காண அந்த மதீன புழுதிகளோடு நானும் காத்திருகின்றேன் இறை நாடினால்...

உங்களை வர்ணிக்க வார்த்தைகள் ஏங்குகின்றன., வாய்ப்புக்கு மொழிகளும் காத்திருக்கின்றன
நான் என்ன செய்ய? அடியேனுக்கு அவ்வளவே அறிவு!

முதலோனின் இறுதித் தூதே,இறுதி நாளின் முதலாமானவரே.நீங்கள் எங்களோடு இருந்திருக்க கூடாதா...? எல்லாம் வல்லவனின் எண்ணம் தானே எல்லாமாகிறது.உங்கள் மீது சாந்தியையும்,சமாதானத்தையும் வல்ல ரஹ்மான் வாரி வழங்குவானாக! உங்களோடு சுவர்க்கத்தில் இருக்கும் நஸிபை எங்களுக்கும் நாடுவானாக!!
அதூப் பாஸி எழுதிய 

மதியை தேடும் இருள்


எம் நெஞ்சினில்
தம்மை ஊஞ்சலாய்
நாம் தாங்குகிறோம்
எம் கண்ணே ,

பதிலுக்கொரு
மதியாகவே
வாரீரோ
எம் மாசில்லா மதியே.

கேட்பீரோ
தாளத்தை
எம் கவி போட்டிடும்
இதயம்

தருவீரோ
முடிவொன்றை
தம் மடியோடு ஒரு
உதயம்.

நாம் என்ன செய்தோம்
தம் உம்மத்தினராக ?
பூமானே,முழு மதியே
எம் வாழ்வில்
இவ்விருளை நீக்க
எப்போது வருவீர் ?
எப்பொழுதும் மதியை தேடுகிறது
இவ்விருள்.

அதூப் பாஸி எழுதிய 

ஒளிரும் விளக்கு


அடியான் யாரன்று
​​பொடியனுக்கு ஊற்றி,அவனில் அவனை
​படியேற வைத்து,அவன்
​நாடித்துடியோடு இறை நினைவை
​படிக்க வைத்தீரே யா ஷாதிலி


​சங்கை மிகு வாழ்வில்
​தங்க ஆஷைகளை நீக்கி
​எங்கும் அவனே என்ற உண்மையை
​அங்கங்கமாக ஊற்றிநீரே யா ஷாதிலி


​கோடிக்கணக்கான
​துடிப் பிள்ளைகள் கொண்டீர்,அவர்களுக்கு
​நேரான வழியை காட்டி,
​சீரான வாழ்விலும் செலுத்தி,
​போராளி ஆக்கினீரே யா ஷாதுலி


​இறைநன்றியை வாழ்வில் தைத்து
​இன்பக்கடலை எம்மில் வைத்து
​இதமுடன் வாழ
​இரவின் பயனை
​இறையிடமிருந்து பெற்று தந்தீரே யா ஷாதுலி

M.M. அப்துல் ரஹ்மானின்

​அன்னை பாத்திமா


​​வாசம் வீசும் நபிக்குடும்ப​​ம்
​​என்னும் பூஞ்சோலையின்
​என்றும் வாடாத வண்ண ரோஜா மலரே

​எங்கள் உயிரான அன்னையே,
​எத்தனை கோடி பெண்கள் இந்த அவனியில்
​​அவதரித்தாலும் பாத்திமா என்ற
பேரொளியில் எல்லாம் மறைந்து விடும்

​​காரணம் அது பேரொளிக்கெல்லாம்
​​​பேரொளி எங்கள் நாயகத்தின் ஒரு
​​பகுதியல்லவா...

​நாளை மறுமையில் என் தாயும் என்
​​சகோதரிகளும் இன்னும் உங்களை இந்த
​​பாரினில் நேசித்த எல்லா முஹ்மினான
​​பெண்களும் உங்கள் பாதத்தில் வீற்றிருக்கும்
​​பாக்கியத்தை தாருங்கள் அன்னையே...

(தாஜுல் ஸலவாத் என்று ஆன்றோர்களால் சிறப்பித்து ஓதப்பட்டு வரும் ஸலவாத்துக்களின் கிரீடமாய் விளங்கும் சிறப்பான ஸலவாத்தின் மொழி ஆக்கமாக இக்கவிதை எழுதப்பட்டுள்ளது)

ஆக்கம் : பி. எம். கமால், கடையநல்லூர் 

விதி மாறும்


அல்லாஹ் ! எங்கள் அருளாளா !
​அருமைத் தலைவர் நபிமீது
​நல்லார் ஓதும் சலவாத்தை
​நாளும் பொழிந்தே அருளாயோ ?

​​எங்கள் நபிகள் நாயகம்தான்
​எழில் மெய்ஞான மணிமகுடம் !
​திங்கள் நபிகள் கைகளிலே
​திகழும் கொடியே புகழாகும் !
​வானப் பறவை புராக்கினையும்
​வசமாய் ஏற்றுக் கொண்டவராம் !
​வானம் ஏறி மி- ராஜில்
​வள்ளல் உன்னைக் கண்டவராம் !
​நோய்கள்சிரமம் நொம்பலங்கள்
​நொடியில் தீர்க்கும் மருந்தவராம் !
​ஆய்வில் அவரின் திருநாமம்
​அனைத்து வேதங் களிலுண்டாம் !
​தலைவிதி எழுதிய பட்டோலை
​தன்னிலும் அவர்கள் பெயருண்டாம் !
​தலைவா ! உந்தன் கைஎழுதும்

ஆக்கம் : ஸபா
​​
​​வாகை சூடும் ரமலானே வருக !!!


​இஸ்லாமிய ஐம்பெரும் பிள்ளையின்
​நான்காவது பிள்ளை ரமலா​னே
​வருக.............வருக...........!


பாவங்களில் திளைத்திருந்த
​மானிடர்களின் பாவங்களை
​கலைத்து
​வாகை சூடவந்த ரமலானே
​உன் வருகை மகத்துவமானது....!
​வருக.....ரமலானே..வருக..!

நோன்பு பூ தொடுப்பவருக்கு
​உன் அருள் வாசலை திறந்து கொடுத்து
​வாகை சூடவந்த ரமலானே
​உன் வருகை மகத்துவமானது..!
​வருக ....ரமலானே..வருக..!


மனம்போன போக்கில்
​களியட்டங்களின்றி
​இப்பொன்னாளில் மனதுக்கு கடிவாளமிட்டு
​தீச் செயல்களைவிட்டு தூரமாக்கி
​இறையன்மையைத் தேடவைக்கும்
​வாகை சூடவந்த ரமலானே
​உன் வருகை மகத்துவமானது..!
​வருக..ரமலானே..வருக..!


ஒன்றுக்கு நூறாய் கூலியை
​தந்து எங்களை ஜெயங் கொல்ல
​வைக்கும்.....
​வாகை சூட வந்த ரமலானே
​உன் வருகை மகத்துவமாது..!
​வருக..ரமலானே..வருக..!


அமல்கள் பல புரிந்து
​பாவங்கள் கலைத்து
​நல்லோரின் கூட்டத்தில்
​நமை சேர்க்கும்...
​வாகைசூட வந்த ராமல்லனே
​உன் வருகை மகத்துவமானது...!
​வருக..ரமலானே..வருக..!


எனதருமை சகோதர சகோதரிகளே
​ஈருலக அமுதம் நல்லமல்களுக்கும்
​சொர்கமேனும் சுந்தரபதியை
​​நல்கிடும் .......
​இந்த புனித மிகு ரமலானை
​நம் உயிர் உள்ள காலமெலாம்
​சந்தோசமாக வரவேற்ப்போம்....
​வல்ல நாயன் நம் அனைவருக்கும்
​ இந்த வசந்தத்தின் வருகையின்
​ வாசனையை நுகரும்
​பாக்கியம் அருள்வானாக .....


வாகை சூட வந்த ரமலானே..
​உன் வருகை ....
​வசந்தமானது...
​மகத்துவமானது...
​புனிதமானது...
​வருக.......ரமலானே...வருக....
​எங்கள் வாழ்வில் வசந்தம்  வீச.....
​வருக....ரமலானே...வருக....!!!



Share

ஆக்கம் : கடையநல்லூர் முஹம்மத் காஸிம்
​​
​​அண்ணலே எம் பெருமானே......!!!


​அவனியும் அண்ட சராசரங்களும்
​அகமகிழ்ந்தனவே தங்கள் பிறப்பினால்
​அனைத்து நற்குணங்களும் ஒன்றாய்
அடிபணிந்தனவே தங்கள் சிறப்பினால்

​​
அகிலத்திற்கே அருட்கொடையாய் வந்த
சீமானல்லவா தாங்கள்
அற்ப மானிடர்கள் அறியா ஆன்மீகப்
புதையலல்லவா தாங்கள்

​​
நிகரற்ற இறையோனும் பாசம் கொண்டான்-
​​தங்கள் மேல்
​நிரப்பமாய் ஸலாம் எனும் நிரந்தர மழை
​​பொழிகின்றான்


​விருப்பமாய் விண்ணோரும் ஸலாம்
கூறுகின்றனர் - இதை
​விண்ணிருந்து வந்த திருமறையும் பறை
சாற்றுகின்றது


​​மாசில்லா மாந்தருள் மாணிக்கமே எங்கள்
​மஹ்மூது நபி வள்ளலே எங்கள் ஸலாம் ...!


​​யா நபி ஸலாம் அலைக்கும்...!
யா ரசூல் ஸலாம் அலைக்கும்...!
யா ஹபிப் ஸலாம் அலைக்கும்...!
ஸலவாதுல்லா அலைக்கும்...!


ஆக்கம் : கடையநல்லூர் முஹம்மத் காஸிம் 
​​
​​காத்திருக்கிறேன் காத்திருக்கிறேன்


காத்திருக்கிறேன் காத்திருக்கிறேன்
கல்பு பரிசுத்தம்நிறை
காத்தமுன் நபிகளின்
கனிவான தரிசனம்
கனவினில் கண்டிடவே...!


காத்திருக்கிறேன் காத்திருக்கிறேன்
காரணப் பெயர்கொண்ட
காவிய முஹம்மதெனும்
கருணை வள்ளலின்
கவின்முகம் கண்டிடவே...!


காத்திருக்கிறேன் காத்திருக்கிறேன்
கஷ்டங்கள் நீக்கிடும்
காரண சலவாத்தின்
கருவியாம் அஹமதின்
காதலைப் பெற்றிடவே...!


காத்திருக்கிறேன் காத்திருக்கிறேன்
கணக்குகள் தீர்க்கப்படும்
கடுமைநிறை மறுமையில் -கைவிடாதெமைக்
கரைசேர்த்திடும் மஹ்மூதரின்
கனிந்த பரிவினை இகத்திலும் பெற்றிடவே...!


காத்திருக்கிறேன் காத்திருக்கிறேன்
காலமுள்ள காலமெல்லாம்
கண்ணியமாய்ப் புகழப்படும்
காருண்ய நபிகளின் கரம்பற்றி முத்தி
கண்களில் ஒற்றிடவே....!


காத்திருக்கிறேன் காத்திருக்கிறேன்
காப்போனின் காதலரை
காசினியின் நாயகரை
கண்குளிரக் கண்டு
களிப்பேருவகை கொண்டிடவே...!


காணாப் பிணி கொண்டு
கவிபாடும் இவ்வெளியவன் மீது
கழிவிரக்கம் கொண்டு
கல்பு குளிர்ந்திடக் கனவினில் வருவீரே
கண்கொள்ளாக் காட்சி தருவீரே...!


அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ரஸூலல்லாஹ்..!
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ஹபீபல்லாஹ்…!
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ஃஹைர ஃகல்கில்லாஹ்..!
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ஸைய்யிதுல் அன்பியாயி வல் அவ்லியாயி…!

ஆக்கம் : கடையநல்லூர் முஹம்மத் காஸிம் 
​​
​​அஹமது எனும் எம் தாய்...!


ஆதி இறையோனின்
​அன்பார்ந்த தூதாய்.....


இகமதில் வந்துதித்தார்
​புகழ்நிறை அஹமதாய்...!

​​
விளங்குகிறார் இறையோனின்
​விருப்பம் நிறை ரஹ்மத்தாய்...!

​​
திகழ்கிறார் அவனியில் தீனோரனைவரும்
​உரிமை கொண்டாடிடும் பொதுச்சொத்தாய்...!

​​
மலர்ந்தாரே தீனுல் இஸ்லாமெனும்
​மாபெரும் விருட்சத்தின் ஏக வித்தாய்....!


​ஒளிர்ந்தாரே அஹதின் நூராக
​ஆன்மீக ஆழியுறை அழகு முத்தாய்....!


​ஆக்கிச் சென்றாரே நம் அனையோரையும்
​அரும்பேறு பெற்ற தம் உம்மத்தாய்...!


​காட்டிச் சென்றாரே கண்ணாடியைப் போல்
​வாழும் நெறி முழுதும் வழிந்தொழுகும்

​​சுன்னத்தாய்....!

​​நிலவைப் பிழந்தது போல் பல அற்புதங்களை
​​நிகழ்த்தி
​கண்டோர் வியந்திடப் பறிமாறினார் காட்சி
​​விருந்தாய்..!


​இம்மையிலும் குணம் தந்தாரே இனிதாக
​நம் உளப் பிணிகளனைத்தும் நீக்கி மருந்தாய்...!


​மறுமையிலும் தவறாது பொழிவாரே
​கருணை மழை நம் மீது ஷஃபாஅத்தாய்...!

​​
அகிலத்தின் அருட்கொடையாம் அண்ணலின்
​அறிவுரைச் சொல் இனித்திடுமே திகட்டாத
​​அமிழ்தாய்...!


​​பொற்குணங்களின் தாயக நபி நாயகத்தை
​​புகழ்ந்துருகிப்
​புண்ணியம் பெற்றிடவே மொழியானாளோ நம்
​​தமிழ்த்தாய்....?


​​மன்னர் முஹம்மதின் அரும்
​​சிறப்புகளனைத்தும்
​ஐயமின்றிப் புரிந்திட்டோம் நாம் எளிதாய்....!


​இருப்பினும்....

​​நம்மில் அற்ப மானிடர் சிலர் அஹமது
​​நபிகளின்
​அற்புதங்களை நம்ப மறுக்கின்றனர் முழுதாய் 

​​​
சற்குண நபிகளின் சரித்திரப் புகழ்தனை
​சற்றும் உணராதிருக்கின்றனர் பேதை
​​மனதாய்...!

​​
முப்பொழுதும் பொருந்தும் காரணப்பெயர்
​​கொண்டிலங்கும்
​முஹம்மதின் புகழ் பாடுதலை வெறுக்கின்றனர்
​​பழுதாய்...!


​​தலையும் விலையும் இல்லா தறுதலைகள்
​சிலரிங்கு ஆக்கிக் கொண்டனர் தம் மானம்
​​புறத்தாய்...!


​​தங்கநபிப் புகழ் மறைக்கத் துணிந்த
​​காரணத்தினால்
​தரணியில் அவர் உழல்வர் தீராத பித்தாய்...!

​​
அர்ரஹ்மானின் நேசரே தங்களின்
​அருமைப் பண்புணர்ந்தோம் நாங்கள்
​​இனிதாய்...!


​​தன்னிகரில்லா தாஹா ரசூலே தாங்கள் தான் -
​​என்றும் எமைத்
​​தகைமையுடன் நேர்வழி நடத்தும் எம் தாய்....!


ஆக்கம் : கவிமகன் காதர்.தோஹா கத்தர்.
​​
​​வரலாற்று பெருமை மிகு வள்ளல் நபி நாயகமே


உயிருக்கும் மேலான உத்தமரே நாயகமே!
உம்மைவிட மேலான உயிரேது நாயகமே?
உம்மிநபி ஆனாலும் உங்களுக்கு இணையாக
இம்மியது அளவேனும் வேறுயார் நாயகமே?


சுடுகின்ற மணல்மீது சூழும்கார் இருட்டினிலே
சுடர்வீசு மதிஎனவே அரபுகளின் நாட்டினிலே
பாசமிகு அன்னைநல் ஆமினம்மா மடியினிலே
நேசமிகு சேயெனவே அவதரித்த நாயகமே!


சத்தியத்தை சொல்வதனால் வந்ததுயர் துன்பங்கள்
சகித்தவரே சாந்தமிகு இரசூலே நாயகமே!
வாளேந்தி வந்தஉமர் தோளோடு துணைநின்ற
வரலாற்று பெருமைமிகு வள்ளல்நபி நாயகமே!


அறுபத்து மூன்றாண்டு அருமார்ந்த வாழ்வதிலே
இருபத்து மூன்றாண்டு இறைவேதம் சுமந்தவரே!
ஒருபோதும் உம்புகழை மறுக்காத இதயத்தை
பெறுதற்கே எமக்காக வேண்டிடுவீர் நாயகமே!


ஆக்கம் : முஹம்மத் தானிஷ் பாச்சா.
​​
​​தீவிரவாதம் உருவாவது அநீதத்தினால் மட்டுமே


கண்கள் மூடினாலும் உறக்கம் வராது
​கால்கள் தேய்ந்தாலும் நிறுத்த இயலாது
​கைகளை உயர்த்தினால் ரத்தம் இருக்காது
சிந்தனை முழுவதும் அமைதியே
​ஆனால் மற்றவர்களின் சிந்தனையிலே தீவிரவாதி
​சோதனையை கண்டு விரைந்தோடும் கூட்டம்
​சோதனையை எதிர்கொள்ளும்பொழுது உணரும்
​தீவிரவாதத்தின் அர்த்தம்
​ஒவ்வொரு மனிதரும் மரணத்தை சுவைப்பான்
​ஆனால் அவன் எவ்வாறு சுவைக்கிறான் என்பதில்
தான் மாறுபடுகிறது இவ்வுவுலகம்....
தீவிரவாதம் காய்த்த இலையல்ல
​காய்ந்த கனி அவை விழுந்தாலும்
​நிச்சயம் உருவாகும் பல கனி
​காய்ந்த கனி மனிதனின் கண்களுக்கு
​ஏளனம்தான் ஆனால் அக்கனியினால்
​மட்டுமே ஒரு உயிரை உருவாக்க இயலும்...
அன்றைய தினம் சமூகத்தை
​குலைக்க நினைப்பவன் தான்
​தீவிரவாதி ஆனால் இன்றோ
​சமூகத்தை காக்க நினைப்பவன்தான் தீவிரவாதி
கரங்களோடு எங்கள் வீரர்களான
​எங்கள் சகோதரர்களோடு எங்களால்
​இணைய முடியவில்லை
​ஆனால் எங்கள் கண்ணீரோடு அவர்களை
இணையும் வாய்ப்பு தந்த அல்லாஹுவிற்கே
​எல்லா புகழும்


ஆக்கம் : யாரோ
​​
கருவறையில் இருந்து ஒரு கடிதம் -
​அம்மா....நலமா....?


அம்மா....நலமா..?..
​உன் ஆசைகளும் நலமா...?
​உன் கருவறை,
​உள்ளே இறைவனின்
​உதவியினால் நான் நலமே!
​உன்னுள்ளே நான்
​உண்டான நாள் முதலாய்
​என்னென்ன வேதனைகள்?
​எத்தனை பேரிடிகள்?
​பெண் பிள்ளை என்று
​ஸ்கேனில் தெரிந்ததுமே-உன்
​கண்ணீர் வெப்பத்தால்
​கருவறையும் சுடுகிறதே...!
​பெண்ணென்றால் என்ன?
​பெரும்பாவச் சுமையா?
​மண்ணும் நோகிறதே...!
​மனதெல்லாம் வலிக்கிறது..!
​மண்ணும் பெண்தானே..
​மதிக்காதார் இங்குண்டோ..?
​பெண்ணென்றால் மட்டுமேன் -
​ஏதோ பிழை செய்த பாவனைகள்?
​ஒலி ,ஒளி நுழையாத
​உள்ளிருட்டுச் சுவருக்குள்
​புலியாய் வளர்கின்றேன்..
​பொருத்திடம்மா சில மாதம்..!
வெளியே வந்தெனது
​விந்தைக் காட்டுகின்றேன்!
​அழாதே........அம்மா ...
​அப்புறம் தேற்றுகிறேன் !
​உன்னை.. ஏசிய வாய்களுக்கு
​எதிர்பூட்டு போடுகிறேன்
​தூசியாய்ப் பகையைத்
​தோல் தட்டி வீழ்த்துகிறேன் !
​தாய்ப்பாலோடு 
​தன்மானப் பாலூட்டு
​வாய்க்கும் ஒருகாலம்
​வாசிகளின் வாய்க் கிழிப்பேன் !
​பெண்ணுக்குப் பெருமை
​பேரழகாய் சேர்த்திடுவேன்
​உன்னை இகழ்ந்தவரை பூரிப்பாய்
​உச்சரிக்க வைத்திடுவேன்!
​உன் கண்ணீரால் இனியும்
​கருவறையை-நனைக்காதே!
​மண்ணில் பெண்களின்
​மகிமையை மறக்காதே!
​நேரம் ஆகிறது எனக்கு
​நித்திரையும் வருகிறது
​மற்றவை நேரில்.....
​வரட்டுமா அம்மா.......?

ஆக்கம் : யாரோ
​​
பூப்பெய்த நாள் முதல்

பூப்பெய்த நாள் முதல்
​பூவைக்கும் நாளுக்காய்
​பூத்து நிற்கும்
​புது பூக்கள் இவர்கள்

​​
தட்சனையில்லா வரனுக்காய்
​வரதட்சணை இல்லா
​வரனுக்காய் காத்து நிற்கும்
​கண்ணீர் பூக்கள் இவர்கள்!

​​
வயதுக்கு வந்ததை
​எண்ணி எண்ணியே
​வயதாகிப்போன
​வண்ணப் பூக்கள் இவர்கள்!

​​
வாழ்க்கைப் படுவதே
​வாழ்கை இலட்சியம்
​இவர்களுக்கு-ஆனால்
​வருபவினடம் வருபவைகளை
​சொன்ன பின்தான்
​கல்யாண நிச்சையம் அவர்களுக்கு!


​​வேண்டாள் - முதுமொழி
​இப்போதெல்லாம் இல்லாளை
​பணம் இல்லாளை ,இல்லாளை
​வேண்டாள் புதுமொழி


​​அவர்களுக்கு ஹதீஸும் தெரியும்
​அல்குர்ஆனும் தெரியும்
​மார்க்கம் சொல்லும் மனமுரையும் தெரியும்
​மேடையில் பேசினால்
​மார் தட்டுவார்
​யாரும் மேடையில் பேசினால் ​கை தட்டுவார்


​​தனக்கு என்ற போது மட்டும்
​வரதட்சணை பெறாமல்
​இல்லை கல்யாணம்
​என்று தோல் தட்டுவார்
​இறைவா இவர்களை
​நீ மன்னிக்கலாம்
​இல்லையேல் தண்டிக்கலாம்...!

ஆக்கம் : யாரோ
​​
என்ன ஆச்சரியம் ? என்ன அதிசயம் ?


மனம் போதும் என்கிற வரையில் தூங்க நேரம்
​​​இருக்கிறது

மூன்று,நான்கு வேலை தவறாமல் சாப்பிடுவதற்கு
​​நேரம் இருக்கிறது...

​குளித்து மணிக்கணக்கில் கண்ணாடிமுன் நின்று
​​அலங்கரித்துக் கொள்ள நேரம் இருக்கிறது...

​நண்பர்கள்,உறவினர்கள் வீடுகளுக்குச்
​​செல்லவும்,நண்பர்களுடன் கேளிக்கை
​​விளையாட்டிற்கும் நேரம் இருக்கிறது...

கதை புத்தகங்கள் ,சினிமா பத்திரிகைகள் ,நாவல்
​​படிக்க நேரம் இருக்கிறது,,
​இரண்டரை மணிநேரம் பார்க்க கூடிய சினிமாவுக்கு
​​போகவும்,நீண்ட தொலைவிற்கு சென்று கேசட்
​​வாங்கி வர நேரம் இருக்கிறது..

​ரேடியோ கேட்கவும் டி.வி. நேரம் இருக்கிறது..
​கம்பெனியின் சம்பள நிலவரங்களையும்
​மார்க்கெட்டில் வந்திருக்கும் புதிய மாடல்
​​சாமான்களின் விலையை விசாரித்து தெரிந்து
​​கொள்ளவும் நேரம் இருக்கிறது.

​மூன்றாவது மனிதரைப் பற்றி வம்பு பேச நேரம்
​​இருக்கிறது...

​​
கம்பெனியில் இன்னும் கூடுதல் பணம் பெறுவதற்கு
​​ஓவர் டைம் தரமாட்டார்களா என்று எதிர்பார்த்து
​​வேலை செய்ய நேரம் இருக்கிறது.....

தங்களின் வேலை ஆக வேண்டும் என்பதற்காக
​​யார் யார் முன்பாகவோ உட்கார்ந்து துதி பாட நேரம்
​​இருக்கிறது...

தொழுகையின் நேரம் இது என்று கடைக் காரர்
​​கழுத்தை பிடித்து வெளியே தள்ளியும்
​​முச்சந்திகளிலும் ,கடை வீதிகளிலும்,மறைவான
​​இடங்களிலும்,அமர்ந்து ஊர் கதை பேச நேரம்
​​இருக்கிறது....

என்ன ஆச்சரியம்? என்ன அதிசயம் ?
இவைகளுகெல்லாம் நேரம் ஒதுக்கும்
​​அன்பர்களுக்கு சொர்க்கத்தின் திறவுகோலாகிய
​​தொழுகையை நிறைவேற்றுவதற்கு மட்டும்
​​நேரமில்லையாம்....

​​சிந்தியுங்கள் அன்பர்களே ...!
​​செயல்படுவீர்கள்  ​​நிச்சயம் !

ஆக்கம் : கடையநல்லூர் முஹம்மத் காஸிம்
​​

மிஹ்ராஜ் எனும் அதிசயம்.!


புனிதப் பயணங்களில்
தலையான பயணமிது....!

மனிதருள் புனிதரும் அவர்தம்
மன்னவனும் சந்தித்துக் கொண்ட
முத்தான நிகழ்வு முகிழ்ந்த பயணமிது....!

முன்பின் இலா மூத்தோனும் அவனின்
அன்பின் உருவான நம் அண்ணலும்
தத்தம் பரஸ்பர நேசம் வெளிப்படுத்தியமை கண்டு
விண்ணோரும் மண்ணோரும்
வியந்து மகிழ்ந்த பயணமிது.....!

பொறுமைக் கடலாம்
நம் பூமான் நபிகளின்
இப்புனிதப்பயணம் இன்றுவரை
பூலோக விஞ்ஞானத்தால்
புரிந்து கொள்ளவியலாத புதிர்ப்பயணம்...!

புண்ணிய நபிகளின்
இவ்விண்ணேற்றப் பயணம்
ஆண்டவனை அறிந்திடும்
ஆன்மிக அகமியமெனும்
முன்னேற்றத்திற்கான பயணப் பாதையில்
முதல் மைல் கல்லானது....!

மிஹ்ராஜ் இரவுப் பொழுது.....
ஹபீபும் அவர்தம் மஹ்பூபும்
ஹுப்பில் இணைந்த இனிய பொழுது...!

அஹதும் அஹமதும்
அண்மிக் களிப்புற்ற ஆனந்த வேளை...!

இப்பயணம் நிகழ்ந்தது ஓர்
இருள் நிறைந்த இரவில்தான்...
எனினும் அது....
ஒளியுறை அருளாளனும் அவன்
ஒளிநிறை அருளானவரும்
கூடிக் கதைத்த ஒளிப்பிரவாகத்தால்
அருளொளிவெள்ளம் நிரம்பி
வழிந்த வண்ண இரவானது.....!

மிஹ்ராஜ் இரவுப் பொழுது.....
பைத்துல் முகத்தஸில்
நபிமார்க்கெல்லாம் நாயகமாக்கி
அழகு பார்த்த ஆண்டவன் நம்
அண்ணலின் அழகு முகம் காண
அழைத்து அகமகிழ்ந்த பொழுது இது..!

அல்லாஹ்வையும்,
சுவர்க்க நரகங்களையும்
நேரில் கண்ட சாட்சியாளராய்
நம் அன்பு நபிகளை
ஆக்கித் தந்த அரிய பொழுது இது....!

காருண்ய நபிகளின்
மிஹ்ராஜெனும் இப்பயணம்
காலம்,திசை,இடம் என்ற
உலகியல் எல்லைகளுக்குள்ளும்
காற்று,கிரகங்களெனும்
வானியல் எல்லைகளுக்குள்ளும்
அடங்காத அற்புதப் பயணம்....!

மன்னவனைக் கண்டு
மண்ணகம் மீண்ட எம்பெருமானும்
மறுமையில் விசாரணை நாளில்
மீஸானில் கனமாக்கும்
தொழுகையெனும் பரிசிலைப்
மாந்தர்க்காய்ப் பெற்று வந்த
மேலான பயணமே மிஹ்ராஜாம்.....!

மிஹ்ராஜின் சிறப்பெலாம்
மேன்மக்களே படித்தறிந்தீர்....இனியேனும்
மிஹ்ராஜால் மேன்மையுற்ற
சிராஜும் முனீராம் எம்
நாயகத் திருமேனியவர்கள்
நம்மைப் போன்ற மனிதரில்லை
நானிலத்தோரே நன்குணர்வீர்....!


ஆக்கம் : லுதுபியா லுக்மான்
​​
ஏன் இந்த வாழ்க்கை

பெட்டிக் கடை வாங்கி
பட்டணத்து வாழ்க்கை வாழ
பட்டப்பகல் கனவு எதற்கு!

கட்டிக் கொடுக்க குமரியையும்
குட்டிக் குட்டி குழந்தையையும்
வீட்டிற்குள் வைத்திருந்து-உனக்கு
வெட்டி வீண் பேச்சு எதற்கு!

பட்டி தொட்டியெல்லாம் கடன் வாங்கி
வட்டி குட்டி போட்ட பின்னும்
முட்டி மோதி தள்ளாடும்-உனக்கு
திட்டமில்லா வாழ்க்கை எதற்கு!

குட்டைக்குள் மீன் பிடித்து
குட்டிக்கரனம் போட்டு
சுட்டித்தனமாய் திரியும் உனக்கு-கொடி
கட்டிப்பறக்கும் நினைப்பு எதற்கு!


ஆக்கம் : முஹம்மத் தானிஷ்
​​
பாலஸ்தீன மகளே

பாலஸ்தீன மகளே
உன்னை மறந்துவிட்டார்கள்
மறந்தவர்கள் கையில் பணத்தை நிரப்பிவிட்டார்கள்
பணம் பணம் என்று
தன் இனம் அழிவதை வேடிக்கை பார்க்கிறார்கள்
உன் தாயை இழந்தாய்
உன் கண்ணீருக்காக சண்டையிட
உன் இனம் துணியவில்லை
ஆனால் அவர்களது கொள்கைகளுக்காக
சண்டையிட துணிந்துவிட்டார்கள்
வற்றி விட்ட உன் கண்ணீரை துடைக்க
துணியவில்லை ஆனால்
நம் இனத்தை கூறுபோட துணிந்துவிட்டார்கள்

மகளே உன் சகோதரர்களை மறந்துவிடு
அவர்கள் உலகத்தை நேசித்துவிட்டர்கள்
மரணத்தை மறந்து விட்டார்கள்
வாயளவில் ஈமான்
வாழும்போது செல்வ சீமான்

மகளே அவர்கள் வாயால் மட்டும்
சகீதை விரும்புகிறார்கள்
ஆனால் உள்ளதால் உன்னை
வைத்து அவர்கள் உலகில் பெயர் பெற நாடுகிறார்கள்

நீ உன் மரணத்தை எதிர்கொள்ள போராடுகிறாய்
இங்கு இவர்கள் செல்வத்தை எதிர்கொள்ள போராடுகிறார்கள்
மன்னித்துவிடு மகளே உன்னை
நினைத்துகொண்டிருக்கும் நல்ல சகோதரனும்
இருக்கிறான் ஆனால் அவன் நாதியற்று
கிடக்கிறான் சோகத்தை பகிர்ந்துகொள்ள
இறைவனையே அழைக்கிறான்

மறவாதே மகளே இவர்கள் உன்னை மறந்தாலும்
இறைவன் உன்னை மறக்க மாட்டான்
உன் கண்ணீருக்கு இந்த பெயர்தாங்கிகளிடம்
பதில் வராது ஆனால் உன் இறைவன்
உனக்கு பதில் அளிப்பான்
உன்னை நேசிக்கும் உன் இனம் ஒருநாள்
வெளிவரும் அன்றோ அண்ணா
என்றழைக்க நீ இருப்பாயா
என்பது இவர்களுக்கு விளங்கவில்லை

இன்றோ நமது பிரச்சனையயே
தாங்கமுடியவில்லை என்று கூறி
பத்து மாடி வீட்டில் இருந்து கூறுகிறார்
உன் விட்டில் உள்ள குண்டுதுலைத்த
கோரம் இவர்களுக்கு என்ன புரியும்

சாலையோரம் சாகக்கிடக்கும்
ஜனங்களுக்கு இறந்காதவர்களா
மகளே உன் ஓலத்திற்கு இறங்கபோகிரார்கள்

நீபோராடும் போராட்டம்
உன் உயிரோடு என்பது இவர்கள் அறிந்தாலும்
உன் ரேத்ததைவிட இவர்களுக்கு
இவர்களது பணவீக்கதில்தான் நாட்டம்

மகளே அங்கு உன் சகோதரன் பிறந்தால்
அவர்கள் போராட்டத்திற்கு வலு
இங்கு உன் சகோதரன் பிறந்தால் இவர்களது
பொருளாதாரத்திற்கு வலு

வெளிநாட்டில் வாழும் ஓவ்வொரு
சகோதரனும் உன்னை நேசிக்கிறான்
ஆனால் ஏனோ அவனும் தாய்நாடிற்கு
சென்றவுடன் உன் கனவை மறக்கிறான்

விட்டுவிடு மகளே உனக்கும்
உன் வீரத்திற்கும் கால்தூசியை
போன்ற இவர்களை அழைக்காதே
உன்னை மிகவும் நேசிக்கும் உன் அல்லாஹுவிடமே
உன் உதவியை கேள்

உன் கண்ணீர் உன் சகோதரனை
விழிக்க செய்ய உதவ வேண்டும்
உன்னை நேசிக்கும் உன் சகோதரர்களை
உனக்கு உதவ முயல வேண்டும்
உன் கண்ணின் சிறுதுளியின் ஈரத்தை
அல்லாஹ் உன்னை விட்டு மறைக்க உதவ வேண்டும்
என்று பிராத்தனையோடு உன்னை நேசிக்கும்
உன் சகோதரன்,,,,