MAIL OF ISLAM

Knowledge & Wisdom



ஹழ்ரத் உஸ்மான் கனி ரலியல்லாஹு அன்ஹு


இரண்டாம் கலீபரசர் அவர்கள் தங்களின் பரலோக யாத்திரை அன்மியதென அறிந்தபோது நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களால் விரும்பப்பட்டவர்களும், சுவர்க்கவாசிகளெனச் சுபச்செய்தி கூறப்பட்டவர்களுமான (அஷரதுல் முபஷ்ஷறா) அலி, உஸ்மான், ஸுபைர், ஸஃது, அப்துர் ரஹ்மான், தல்ஹா (ரலியல்லாஹு அன்ஹுமா) ஆகிய அருவரடங்கிய ஒரு சபையை நியமித்து, அவர்கள் மரணத்தின் பின் மூன்று நாட்களுக்குள் அவர்களிலிருந்து தக்க கலீபா ஒருவரை அதிகப்படியான வாக்குமூலம் தெரிந்தெடுக்குமாறு ஆக்ஞாபித்தார்கள். (இங்கு உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் ஒரு நேர்மைக் குணம் கவனிக்கத்தக்கது. அதாவது ஸையித் இப்னு அம்று என்பவர் சுவர்க்கத்தைக்கொண்டு சுபசெய்தி கோரப்பட்டவராயிருந்தும் இன்னும் தன் மகன் அப்துல்லாஹ்வை கலீபாவாக நியமிக்குமாறு அனேக ஸஹாபாக்கள் கேட்டுக்கொண்டவர்களாயிருந்தும் அவர்கள் சொந்தக்காரராயிருந்தைமையாலும் முந்தியவரை சபையிலும் பிந்தியவரை கலீபாவாகவும் நியமிக்காததேயாம்.



உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை நல்லடக்கம் செய்த பின் மிஸ்வர் பின் மஃரமாவின் இல்லத்தில் இவ்வறுவரும் தங்கள் முதல் கூட்டத்தைக் கூட்டினார்கள். அக் கூட்டத்தின் பயனாய்ச் சொந்தத்தையோ வேறெந்தச் சம்பந்தத்தையோ கருதாது மக்களின் நல்லதையும், நேர்மையையும், சத்தியத்தையும்  மட்டுமே இத் தேர்தலில் மேற்கொண்டொழுகுவதாக வாக்களித்த அப்துர் ரஹ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள், மூன்று இரவும் பகலும் மதீனாவில் ஸஹாபாக்களிடம் ஆலோசனை கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்களின் விருப்பமெல்லாம் அறிந்த பின்னர் முஹாஜிர்கள், அன்ஸார்கள் மற்றும் பிரமுகர்கள் யாவரையும் பள்ளிவாயலுக்கழைத்து, அவர்கள் முகதாவில் உதுமான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களைப் பார்த்து ‘அல்லாஹ்வை முன்வைத்து, குர்ஆன், பெருமானாரின் முன்மாதிரி, இரு ஆன்றோர்களாகிய அபூபக்கர் (ரலியல்லாஹு அன்ஹு) உமர் (ரலியல்லாஹு அன்ஹு) ஆகியவர்களின் அடிச்சுவடு இவைகளைப் பின்பற்றி நடப்பதாய் வாக்களியுங்கள்’ என்றார்கள். அப்படியே வாக்களித்தபின் எல்லோரும் உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை கலீபாவாகத் தெரிந்தெடுத்து அவர்கள் கரத்தில் உறுதிமொழி செய்தார்கள். உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் கிலாபாத்தின் துவர்க்கம் கி. பி. 644ம் வருஷம் ஹிஜ்ரி 24ம் வருடம் முஹர்ரம் முதல் தேதியாகும்.



உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் விவரணம்

கலீபாவாகத் தெரிந்தெடுக்கப்படும்போது உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் வயது எழுபது. ஆணைவருஷத்தின் ஆறாவது ஆண்டில் பிறந்தார்கள். இவர்கள் அப்பானுடைய மகன். உமையாவின் வம்சத்தில் உள்ளவர்கள். இவர்கள் உயரமானவர்கள். தங்கள் நரைத்த தாடிக்கு மருதொன்றிச் சாயம் ஏற்றுவார்கள். அபூபக்கர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் போதனையால் இஸ்லாத்தைத் தழுவியவர்கள். சன்மார்க்க விஷயத்தில் மகா பக்தி விசுவாசமுள்ளவர்கள். தியானம் செய்வதிலும் அதிகம் ஈடுபட்டவர்கள். சுத்த சாதுவும் ஸூபியுமாயிருந்தவர்கள். ஏழைகளிடத்தில் அளவுகடந்த இரக்கமும், தயாளமும் உடையவர்கள். மதீனாவிலுள்ள மஸ்ஜிதைச் சுற்றியிருந்த நிலங்களனைத்தையும் அதிகமான கிரயம் கொடுத்து வாங்கி நபிகள் நாயகத்தின் மனைவியருக்கு வேண்டிய விடுதிகளையெல்லாம் அமைத்துக் கொடுத்தார்கள். பெருமானாரின் இரண்டு குமாரிகளை (ருகையா, உம்முகுல்தூம்) ஒருவர்பின் மற்றொருவராய் மணமுடித்தவர்களாதலாலும் இரண்டு ஹிஜ்ரத்திலும் சம்பந்தப்பட்டிருந்ததனாலும் இவர்கள்பால் முஸ்லிம்களுக்கு அதிக மரியாதையும் அபிமானமும் இருந்து வந்தன. மேலும் இவர்கள் மக்காவிலுள்ள கஃபதுல்லாஹ்வைச் சுற்றி ஒரு சுவர் எழுப்பி அதைப் பத்திரப்படுத்தினார்கள். நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) மஸ்ஜிதையும் அதிவிசாலமாய்க் கட்டி அதை அலங்காரப்படுத்தினார்கள். இவர்கள் இஸ்லாமிய உலகுக்குச் செய்த இணையற்ற இன்னொரு பேருபகாரம் என்னவெனில் அன்னவர் மேற்பார்வையில் திருக்குர்ஆனின் ஏழு பிரதிகளை எழுதுவித்து முஸ்லிம் ராஜ்யம் முழுதும் பரப்பினதேயாம். இன்றளவும் முஸ்லிம்களிடையே காணப்படும் குர்ஆன் பிரதிகளெல்லாம் உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் காலத்தில் எழுதப் பெற்ற அந்த மெய்யான பிரதிகளின் சரியான நகல்கலாகவே இருக்கின்றன. ருகையாவின் கடும் நோயின் காரணமாக, பத்று யுத்தத்துக்கு மாத்திரம் இவர்கள் சமுகமளிக்க முடியவில்லை. மற்றெல்லா யுத்தங்களிலும் பெருமானாருடன் கலந்திருந்தார்கள். தபூக் யுத்தத்துக்காகக் தயார் செய்யப்பட்ட ‘ஜைசுல் உஸ்ரா’ வெனும் சேனை இவர்கள் முயற்சியாலும் கொடையாலும் தயாரிக்கப்பட்டது. மதீனாவில் பிரசித்தி பெற்ற ‘பிருரூமா’ வெனும் கிணற்றை முஸ்லிம்களுக்காக வாங்கி விடுபவனை சுவர்க்கவாதியெனப் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூற, இவர்களே அதை வாங்கி முஸ்லிம்களுக்காக அர்ப்பனஞ் செய்தார்கள். பெருமானார் காலத்தில் வஹி எழுதுவோராகவும் இருந்தார்கள். எத்தகைய குழப்பமாயினும் தம்மில் நின்றும் ஏற்பட்டு விடுமோவென எப்போதும் அஞ்சி வந்தார்கள். இதே காரணத்தால் அநேக காரியங்களில் மன்னிப்பையும் மிருதுப்பான்மையையும் கைக்கொண்டு வந்தார்கள். இத்தகைய மிருதுப்பான்மை ஒரு அதிபருக்கோ, கலீபாவுக்கோ எப்பொழுதும் தகுந்ததாயிராது. இதனால் அதிகாரம், கிலாபத் இவைகளின் பக்தியைப் பிரஜைகள் இழந்து விடுவதுடன், அவர்கள் வரம்பையுங் கடந்து குழப்பங்களும் உண்டாக்கித் திரிய ஏதுவாகும். இத்தகைய நிலை இக்கலீபாவின் ஆட்சியின் கடைசிப் பகுதியில் சிறிது காணப்பட்டது என்பர்.



கிலாபத் பிரசங்கம்

இவர்கள் கலீபாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு பிரசங்க மேடை மீதேறி நின்று, செல்வப் பெருக்கத்தால் முஸ்லிம்களின் மாறுபட்ட நிலைமையைக் கவனித்து, நற்கிரியைகளின் முக்கியத்துவத்தையும் எடுத்துக் கூறிவிட்டு “மனிதனையே மாற்றும் இகலோகத்தின் சில நாள் ஆடம்பரத்தைக் கண்டு மறந்துவிடக் கூடாது. ஷைத்தானின் வலைகளில் அகப்படாது தப்பிக் கொள்ளுங்கள்! உங்கள் ஜீவியத்தைத் ‘அல்லாஹ்’ வின் சம்மதியி விழைந்து நிற்பதிலேயே கழியுங்கள்’’ எனக் கூறினார்கள். பின்னர் சேனாதிபதி மாகாணத் தலைவர்கள் ஆகியோருக்குப் பிரஜைகளிடம் நீதிநெறி வழுவாது நடந்து கொள்ளுமாறும் முந்திய கலீபாக்களின் காலத்தில் நடந்து கொண்டதே போன்று பணியாற்றி வரும்படியும், நம்பிக்கை, நேர்மை இவைகள் மீது நிலைத்திருக்கும்படியும் ஒரு கட்டளை பிறப்பித்தார்கள்.



உமர் (ரலியல்லாஹு அன்ஹு) காலத்து கவர்னர்களையே தொடர்ந்து வைத்தல்

உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) கலீபாவான பின் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களால் நியமிக்கப்பட்டிருந்த கவர்னர்களை அப்படியே அவ்வுத்தியோகத்தில் தொடர்ந்து கடமையாற்றுமாறு வைத்துவிட்டார்கள். எனவே முஆவியா பின் அபூஸுப்யான் (ரலியல்லாஹு அன்ஹு) ஸிரியாவிலும் ஸஃது இப்னு அபீவக்காஸ் (ரலியல்லாஹு அன்ஹு) கூபாவிலும் கவர்னர்களாயிருந்தனர். (கூபாவின் கவர்னராயிருந்த முகீரத் இப்னு ஸுஃபா என்பவர் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) வின் உத்தரவுப் பிரகாரம் நீக்கப்பட்டார்) இந்நிலையில் சிறிது காலங்கழிந்த பின்னர் சில காரணங்களுக்காக அநேக கவர்னர்களையும், அதிகாரிகளையும், நீக்கிவிட்டுத் தங்கள் குடும்பத்தாருட் சிலரை அவ்விடங்களுக்கு நியமித்தார்கள்.



பாரசீகத்தின் வெற்றியின் பூர்த்தி

பாரசீக நகரம் முழுவதும் இரண்டாம் கலீபாவான உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் காலத்தில் வெற்றிக்கொள்ளப்படவில்லையென நாம் இதற்குமுன் கூறியுள்ளோம். ஹிஜ்ரி 31–ல் உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் தங்கள் மைத்துனராகிய அப்துல்லாஹ் இப்னு ஆமிர் என்பவரைத் தலைமை அதிகரியாக்கி அத்தேச வெற்றிகளைப் பூர்த்தியாக்குமாறு ஏவினார்கள். அப்பொழுது அவர் ஸ்பராயின், தூஸ், அஜ்தஷீர் போன்ற பல நகரங்களைப் பிடித்தனர். அஜ்தஷீர் எனும் நகரில் யஸ்தஜர்த் ஒளித்திருந்தான். அவன் அங்கும் தோற்றதனால் ‘மர்காப்’ எனும் ஆற்றங்கரையிலுள்ள ஓர் ஊருக்குத் தனிமையாய் ஓடிவிட்டான். அங்கு ஒரு கற்கொல்லனின் வீட்டில் பதுங்கியிருக்கும்போது கண்டுபிடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டான். இவன் கொல்லப்பட்ட பின்னர் பாரசீக தேசம் முழுதும் முஸ்லிம்களுக்கானது. ஹிஜ்ரி 31–ல் பாரசீக தேசம் முழுதும் உள்ள முழு ஜனங்களும் முஸ்லிம்களுக்குத் தலைவணங்கி நின்றார்கள். இஸ்லாமையும் அவர்கள் தழுவிக்கொண்டு அரபிகளுடன் கலந்துகொண்டார்கள். இஸ்லாத்தின் பக்கபலமான அரசாட்சியுள்ள ஒரு தேசமாக அது மாறியது. நிதமும் சாந்தியும் அங்கு நிலவின.



கிளர்ச்சிகளும் குழப்பங்களும்

உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் காலத்தில் ஹாஷிம் வர்க்கத் தலைவர்களை மதீனாவிலேயே இருக்கச் செய்தார்கள். யுத்தத்திலாவது கலந்துகொள்ள அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் காலத்தில் யுத்தங்களில் கலந்திருந்த நன்மையே உங்களுக்குப் போதுமென்று சொல்லி விடுவார்கள். உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் காலத்தில் இத்தடை இருக்கவில்லை. இவர்கள் போனவிடமெல்லாம் சிறப்பும், செல்வமுமாக வாழ்ந்து வந்தனர். மேலும் அரசகுடும்பத்தைச் சேர்ந்தவர்களாக கருத்தப்பட்டு வந்தனராததால் சிறப்பு மேலும் அதிகரித்தது. ஜனங்கள் அவர்களிடம் குழுமியிருக்கவும் தொடுத்தார்கள். இவர்களிடம் கலீபாவாகத் தக்க நிபந்தனைகள் காணப்பெற்றதால் ஒரு நாளைக்கு கலீபாவாகவுங் கூடுமெனவும் ஆதரவு வைத்தார்கள். பின்னர் இதை அவர்கள் வெளியிட்டுக் கூறவும் தொடுக்கவே அபிப்பிராய பேதம் தலைகாட்டத் தொடங்கியது. சிலர் கலீபா அவர்கள் தங்கள் சுற்றத்தாரையே அதிகாரிகளாக்குகிறார்கள் எனவும், அவர்களை அல்லது அவர்களிற் சிலரை நீக்கிவிடுமாறும் விண்ணப்பித்துக் கொண்டனர். அவர்களின் எல்லா விண்ணப்பங்களும் கவனிக்கப்படவில்லையாதலால் ஜனங்களை அவர்கள் கலீபாவுக்கு விரோதமாய் எழுப்பி விட்டார்கள். இவர்களின் தலைவனாயிருந்தவன் ‘அப்துல்லாஹ் இப்னுஸபா’ என்பவனாவான். ‘ஷியா’ எனும் ஒரு பிரிவை உண்டாக்கியவன் இவனே. இவன் ‘ஸன்ஆவின்’ யூதன். தன்னை முஸ்லிமெனக் கூறிக்கொண்டு முஸ்லிம்களுடன் கலந்து கொண்டான். இவனது சிறப்புப் பெயர் ‘இப்னுஸவாதா’ என்பதாகும். முதன் முதல் பஸராவில் தான் வெளியானான். பின்னர் எகிப்து, ஸிரியா முதலான இஸ்லாமிய நாடுகளிலெல்லாம் போய் இரகசியக் கூட்டங்கள் வைப்பதும். ஜனங்களைத் தன் கட்சிக்குத் திருப்புவதும் கலீபாவின்மீது விரோதத்தை உண்டாக்குவதுமாயிருந்தான். ஹாஷிம் வர்க்கத்தினர் தான் கிலாபாத்துக்கு உரித்துடையவர்கள் என்றும், உமைய்யாவின் வர்க்கத்தினர் தகுதியற்றவர்களேன்றும் கூறி அவ்வர்க்கங்களுக்கிடையில் எழுச்சியை உண்டு பண்ணினான். இதுதான் முதன் முதல் ஹாஷிம் வர்க்கத்தவருக்கும் உமய்யா வர்க்கத்தினருக்குமிடையிலுண்டான அபிப்பிராய பேதமும், ‘ஷிஆ’ ப் பிரிவின் தொடக்கமுமாகும்.



மறைவு

புரட்சிக்காரர் மதீனாவுக்கு மீண்டும் வந்த பொழுது கலீபா அவர்கள் அக்கடிதத்தைப் பற்றி இதுவுன் தங்களுக்குத் தெரியாதெனச் சத்தியஞ் செய்து ஆணையிட்டுக் கூறினார்கள். ஏனெனில் உண்மையில் இதை எழுதியவர் கலீபா அவர்களுடைய வர்க்கத்தைச் சேர்ந்தவரும், அவர்களுக்கு உதவி செய்பவர்போல் இருந்து தனது எண்ணம்போல் கருமங்களை நிறைவேற்றத் துணிந்த ‘மறுவானிப்னுல் ஹகம்’ என்பவராவர். கூபாவினதும் பஸராவினதும் புரட்சிக்காரரையும் இதில் சந்தேகிக்கப் போதிய காரணம் உண்டு. அவர்களும் இக்கடிதம் விஷயமாய் செய்ய வேண்டிய ஒழுங்குகளைச் செய்து நிருபனையனுப்பி, இன்ன நேரத்துக்கு எகிப்தியக் குழப்பக்காரர் இக்கடிதம் கண்டதும் மதீனா திரும்புவர் என்று உத்தேசித்து தாங்களும் அதே நேரத்தில் மதீனாவில் சேர்ந்து கலீபா அவர்களைக் கொலை புரிய ஏவவே செய்த ஒழுங்கெனவுங் கூற இடமுண்டு. கலீபா அவர்களின் சத்திய வார்த்தைகளைப் புரட்சிக்காரர் பொருட்படுத்தாது, அவர்களின் வீட்டை நாற்பது நாட்களாக முற்றுகையிட்டனர். கலீபா அவர்களுக்குத் தண்ணீர்கூடக் கிடைப்பதை மறித்தனர். இன்னுன் தாமதித்தால் கலீபா அவர்களுக்கு உதவி வந்து விடுமென அறிந்த புரட்சிக்காரர் பின்புறத்தால் உடைத்துக் கொண்டு கலீபா அவர்களின் அறைக்குள் நுழைந்து அவர்கள் திருகுர்ஆன் ஓதிக்கொண்டிருக்கும்போது அவர்களைக் கொலை செய்தனர். இப்படிப் புரட்சிக்காரரால் கொல்லப்பட்ட முதல் கலீபா இம்மூன்றாம் கலீபரசரேயாவர். இது ஹிஜ்ரி 35- ம் வருட இறுதியில் நடைபெற்றது. (கி. பி. 656) அப்பொழுது கலீபா அவர்களின் வயது 82. அவர்கள் 12 வருடங்கள் தான் கலீபாவாய்க் கடமையாற்றினார்கள். அல்லாஹ் அவர்களுக்கு அருள்புரிவானாக!!