MAIL OF ISLAM

Knowledge & Wisdomதமிழ் பகுதி - வலிமார்கள் வரலாறு - அஹ்மத் கபீர் ரிபாயி ரலியல்லாஹு அன்ஹு

அஹ்மத் கபீர் ரிபாயி ரலியல்லாஹு அன்ஹு


பிறப்பு


ஆத்மீக ஞான ஆசிரியர், ஆலிமே ஷரீஅத், இமாமே தரீகத், ரிபாயி தரீக்காவின் ஸ்தாபகர், குத்புல் அக்தாப், ஸுல்தானுல் ஆரிஃபீன் ஸையித் அஹ்மது கபீர் ரிபாயி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹிஜ்ரி 512 ஆம் ஆண்டு ரஜப் மாதம் திங்கட்கிழமை 27 ஆம் நாள் ஈராக் நாட்டில் பஸ்ரா எனும் நகரில் அபூ உபைதா என்னும் ஊரில் பிறந்தார்கள்.


பிறப்பின் சிறப்பு

ஸுல்தானுல் ஆரிஃபீன் ஸையித் அஹ்மது கபீர் ரிபாயி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தந்தையின் பெயர் அஸ்ஸையித் அபுல் ஹஸன் அலி ரலியல்லாஹு அன்ஹு. தாயாரின் பெயர் உம்முல் பரக்காத் பாத்திமா என்பதாகும். தந்தையார் அறிவும், ஆற்றலும், வணக்கமும், பொறுமையும் உடையவராகவும் இறை ஞானத்தில் மூழ்கியவராகவும் தாயார் சிறந்த பயபக்தியுடையவராகவும் திகழ்ந்தார்கள். கபீர் ரிபாயி நாயகம் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருப்பேரர் இமாம் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பரம்பரையில் பிறந்தவர்கள்.கல்வி

ஸுல்தானுல் ஆரிஃபீன் ஸையித் அஹ்மது கபீர் ரிபாயி ரலியல்லாஹு அன்ஹு அன்னவர்கள் ஏழு வயதிலேயே அல்குர்ஆன் முழுவதையும் மனனம் செய்து விட்டார்கள். அலி இப்னுல் காரி என்ற பெரியாரிடம் மார்க்க கல்வி பயின்றார்கள். அதன் பிறகு ஆன்மீக செல்வர் வாஸித்தி ரலியல்லாஹு அன்ஹு அன்னவர்களிடம் ஷரீஅத், தரீகத், ஹகீக்கத், மஃரிபத் கல்விகளை கற்று ‘அபுல் அலமைன்’ என்ற பட்டத்தையும் பெற்றுக்கொண்டார்கள்.துறவு

ஸுல்தானுல் ஆரிஃபீன் ஸையித் அஹ்மது கபீர் ரிபாயி ரலியல்லாஹு அன்ஹு அன்னவர்கள் மார்க்க கல்வியை கற்றபின் தங்களது 27 வது வயதில் ஃபதாயிஹ்வின் அண்மையிலுள்ள காடொன்றிற்கு சென்று தவத்தில் ஈடுபட்டார்கள். அங்குள்ள ஆற்றங்கரை ஒன்றில் அவர்கள் அமர்ந்து உணவு, உறக்கமில்லாமல் தவம் செய்தார்கள். முஹியத்தீன் அப்துல் காதர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அன்னவர்கள் வீற்றிருந்து தவம் செய்த அதே குகையில் வீற்றிருந்து தவம் செய்தார்கள். இஷா தொழுகைக்கு செய்த வுளுவைக் கொண்டே, ஸுப்ஹு தொழுகை தொழுவார்கள்.ரிபாயி தரீக்காவின் உருவாக்கம்

ஸுல்தானுல் ஆரிஃபீன் ஸையித் அஹ்மது கபீர் ரிபாயி ரலியல்லாஹு அன்ஹு அன்னவர்கள் தங்களின் தரீக்காவைப் பற்றி குறிப்பிடும் பொழுது “நம்முடைய தரீக்கா மூன்று செயல்களின் மீது நிர்மாணிக்கப்பட்டதாகும்”


அவை:-

1. எதனையும் பிறரிடம் கேளாதிருப்பது.

2. தானாக வருவதைத் தட்டாமல் ஏற்றுக் கொள்வது.

3. நாளைக்கென எதனையும் சேமித்து வைக்காதிருப்பது என்று கூறினார்கள்.


ரிபாயி நாயகம் அன்னவர்கள் தம தவமடத்தில் திங்கள், வியாழன் தவிர ஏனைய நாட்கள் ஃபிக்ஹு, தப்ஸீர், ஹதீது ஆகியவற்றைத் தம் சீடர்களுக்கு கற்றுக்கொடுப்பார்கள். திங்களும், வியாழனும் லுஹர் தொழுகைக்குப்பின் நாற்காலியில் அமர்ந்து மக்களுக்கு உபதேசம் பண்ணுவார்கள். லட்சக்கணக்கான மக்கள் அந்த உபதேசம் கேட்டு நன்மை அடைவார்கள். ரிபாயி நாயகம் அவர்கள் தன் முரீத் அப்துஸ் ஸமீஉ ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எழுதிய அறிவுரைகள் ‘ஹிகமுர் ரிபாயி’ என்னும் பெயருடன் விளக்குகின்றன.ஸுல்தானுல் ஆரிபீன் என்ற சிறப்பு பெயர் கிடைத்தமை

ஸுல்தானுல் ஆரிபீன் ஸையத் அஹ்மத் கபீர் ரலியல்லாஹு அன்ஹு அன்னவர்கள் மக்கா சென்று அதன் அண்மையிலுள்ள அரபாத் மலைமீது ஏறி அங்கு 40 நாட்கள் உணவு உறக்கமில்லாமல் அல்லாஹ்வின் நினைவில் அவர்கள் மூழ்கி இருந்தார்கள். அப்பொழுது அல்லாஹுதஆலா அவர்கள் மீது மகிழ்ச்சி அடைந்து அவர்களை ஸுல்தானுல் ஆரிபீன் என்னும் அழகுத் திருப்பெயரிட்டு அழைத்தான். அதன் பின் பல்வேறு அகமிய இரகசியங்களையும் அவர்களுக்கு வெளிப்படுத்தினான். அடுத்து கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களும் திருத்தோற்றம் வழங்கி ஸலாம் கூறி “மகனே! நீர் இன்றிலிருந்து ஸுல்தானுல் ஆரிபீன் ஆனீர். மேலும் மஹ்பூபு ரப்பில் ஆலமீனும் ஆனீர்” என்று கூறி அவர்களின் நெற்றியில் முத்தமிட்டார்கள். பிறகு ‘இறைவனே! உன் அன்பையும், அதிக அறிவையும் இவருக்கு அதிகரிப்பாயாக!’ என்று துஆ செய்தார்கள்.


அதற்கு பிறகு ரிபாயி நாயகம் அவர்கள் வாஸித் நகரை வந்தடைந்த போது அங்கிருந்த வலிமார்கள், பெரியார்கள், ஸுல்தானுல் ஆரிபீனே, மஹ்பூபு ரப்பில் ஆலமீனே! வருக வருக என்று வரவேற்றார்கள். அதற்கு பிறகு அங்கிருந்து பதாயிஹ் என்ற ஊருக்கு அவர்கள் வந்த போது அங்குள்ள பெரியார்கள் ஸுல்தானுல் ஆரிபீனே மஹ்பூபு ரப்பில் ஆலமீனே என்று வரவேற்றார்கள். ஒரு நாள் அவர்கள் தன் வீட்டில் அமர்ந்து இறைவனை தியாநித்துக்கொண்டிருக்கும் போது ‘ஸுல்தானுல் ஆரிபீனே’ நாம் உமக்களித்த பட்டத்தை மக்களுக்கு எடுத்து கூறும் என்று ஒரு அசரீரி கேட்டது. எனினும் அடக்கம், பணிவு காரணமாக அவர்கள் தனக்கு கிடைத்த பட்டத்தை மக்களுக்கு தெரிவிக்கவில்லை. மீண்டும் திரும்ப திரும்ப 70 தடவைகள் இறைவனின் அசரீரி வந்தது. அதற்கு பிறகுதான் அவர்கள் மக்களிடம் அந்தச் செய்தியை தெரியப்படுத்தினார்கள்.ரிபாயி நாயகத்தை பற்றி பெரியார்கள்

• கௌஸுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு:

ஷரீஅத், தரீகத், ஹகீகத், மஃரிபத் ஆகிய நான்கு கடல்களும் ஒன்று சேர்ந்த மாபெரும் கடல் அவர்கள். அவர்களின் மாண்பினை வாயால் சொல்லி முடிக்க முடியாது. எனக்குப் பின் அவர்களே கௌஸுல் அஃலமாக விளங்குவார்கள்.


• ஷிஹாபுத்தீன் ஸுஹரவர்த்தி ரலியல்லாஹு அன்ஹு:

கிள்ரு அலைஹிஸ்ஸலாம் அவர்களை சந்தித்து, ஸையித் அஹ்மத் கபீர் ரிபாயி ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் பற்றி தங்களின் கருத்து என்ன என்று கேட்டேன். அதற்கு அவர்கள் கூறினார்கள், ‘அவர் போன்ற இறை நேச செல்வரை, இறையன்பில் மூழ்கி திளைக்கும் இறை காதலரை நான் கண்டதில்லை. அவர் இக்காலத்து குத்பாக உள்ளார்’.மறைவு

ரிபாயி நாயகம் அவர்களுக்கு ஏற்பட்ட வயிற்றுப் போக்கு, 20 நாட்களாகியும் குறையாமல் நீடித்துக் கொண்டிருப்பதை கண்ட அவர்களின் உறவினர்கள், அதற்கான காரணத்தை அவர்களிடம். கேட்டார்கள். அதற்கு ரிபாயி நாயகம் அன்னவர்கள் கூறினார்கள். மக்கள் மீது சோதனைகள் இறக்காமல் அவற்றை என் மீது இறக்குவாயாக என்று இறைவனிடம் கண்ணீர் வடித்து இறைஞ்சினேன். ஆதலால் இறைவன் இறக்கி வைக்கும் துன்பங்களையும், துயரங்களையும், வேதனைகளையும், சோதனைகளையும் என் மீது ஏற்றுக்கொண்டு அவை அவர்களை தாக்காது நான் அவைகளை தாங்கிக்கொண்டேன். அதன் காரணமாக என் உடல் நலிவுற்று விரைவில் இறப்பை அடையவுள்ளேன். இதுவரை என் தசைகளும், கொழுப்புகளும் கரைந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன. நாளை என் மூளை உருகி வெளியே வரும். அத்துடன் என் உயிரும் என் உடலை விட்டு வெளியேறி இறை சந்நிதானத்தை அடையும் என்று கூறினார்கள்.


அடுத்த நாள் அவர்கள் கூறியபடியே அவர்களின் மூளை உருகி வெண்ணிறத்தில் மூன்று தடவை வெளியானது. அப்பொழுது அவர்கள் தம அருகில் இருந்த தம் சீடர்களை நோக்கி “நான் அறிவுறுத்திய வண்ணம் செயலாற்றி வாருங்கள். இறைவனின் அழைப்பு எனக்கு வந்துவிட்டது. நான் செல்கிறேன்” என்று கூறினார்கள். அடுத்த கணம் அவர்களின் நாவு கலிமாவை மொழிந்தது. கண்கள் தாமாகவே மூடிக்கொண்டன. 66 ஆண்டு காலம் வாழ்ந்த அவர்களின் ஆன்மா அவர்களின் உடலைவிட்டும் நீங்கி இறை சந்நிதானத்தை சென்றடைந்தது. இது நிகழ்ந்தது ஹிஜ்ரி 578 ஜமாத்துல் அவ்வல் பிறை 22 பிற்பகல் (கி.பி. 1183 செப்டம்பர் 23 ஆம் நாள்) வியாழக்கிழமையில் ஆகும். அடுத்த நாள் அவர்களின் புனித உடல், அவர்களின் பிறந்த இடமான ஃபதாயிஹ்வில் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.