MAIL OF ISLAM

Knowledge & Wisdomஅற்புதம் = முஃஜிஸாத் + கராமத் 

எழுதியவர்:  நஸுர்தீன் காசிம்


"அற்புதம்” என்னும் சொல்லுக்கு சூஃபிகளின் மொழியில் இரண்டு கலைச் சொற்கள் உண்டு. முஃஜிஸாத் மற்றும் கராமத். இரண்டுக்குமே அற்புதம் என்றுதான் வெளிப்பொருள்.

அற்புதங்கள் வெளிப்படும் கருவிகளாக இருவகை மனிதர்கள் உள்ளனர். இறைத்தூதர்கள் (நபிமார்கள்) மற்றும் இறைநேசர்கள் (அவ்லியாக்கள், ஸுஃபியாக்கள்).

இறைத்தூதர்களின் வழியே நிகழும் அற்புதம் ‘முஃஜிஸா’ என்றும் இறைநேசர்களின் வழியே நிகழும் அற்புதம் ‘கராமத்’ என்றும் சொல்லப்படும்.

இவ்வார்த்தைகளின் அகராதிப் பொருளைக் கவனித்தால் அதில் ஆழமான தத்துவங்களைத் தரிசிக்க முடியும்.

முஃஜிஸா என்னும் சொல்லின் வேர் ’இஜ்ஸ்’ என்பது. அதன் பொருள் இயலாமை! அதாவது பரிபூரண இயலாமை நிலையில் தன்னை முழுமையாக இறைவனின் கைகளில் ஒப்படைத்துவிட்டவரின், சுய-இச்சை என்பது துளியும் இல்லாத நிலை பெற்றவர்களின் வழியே இறைவன் நிகழ்த்தும் அற்புதமே முஃஜிஸா எனப்படும்!


​​அதனைச் செய்வது இறைவன்தான். இறைத்தூதர் அதற்கான கருவி மட்டுமே.


​​மூஸா அரைஹிஸ்ஸலாம் அவர்கள் கடலினைப் பிளந்ததும் தன் கையை வெண்மையாக்கிக் காட்டியது போன்ற அற்புதங்கள், ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வியாதிகளை சுகப்படுத்தியதும் இறந்தவரை உயிர்பெறச் செய்ததுமான அற்புதங்கள், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நிகழ்த்திய அற்புதங்கள் ஆகியவை எல்லாம் இந்த வகைப்பட்டவையே.

கராமத் என்னும் சொல்லின் வேர் ‘கரம்’ என்பது. அதன் பொருள் நேசம். கருணை, அருள், அன்பு ஆகிய அர்த்தபாவங்களைக் கொண்டது. இந்த வகை அற்புதம் என்பது அருள் பொங்கும் நிலையால் உண்டாவது. இறைவனின் கருணை இறைநேசர்களான சூஃபிகளின் இதயங்களில் பொங்கி மனித குலத்தை நோக்கிப் பாயும் நிலையில் நிகழும் சம்பவங்களை எல்லாம் கராமத் என்று சொல்லலாம். அவை இயல்பான செயல்களாக இருந்தாலும் சரிதான், அல்லது இயல்பை மீறியவையாக இருந்தாலும் சரிதான்.

இந்தப் புள்ளியில்தான் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் இருக்கிறது. அதாவது சூஃபித்துவத்தின் வித்து எது என்று பார்க்கின்றபோது ‘அன்பு’ என்றே சொல்லிவிடலாம். ஆனால் அவற்றைவிடப் பொருத்தமான, பிரபலமான ஒரு வருணிப்பு சூஃபிகள் இறைக் காதலர்கள் (Sufis are lovers of God) என்பதே!

சூஃபிகள் இறைவனை ஆழமாக நேசிக்கிறார்கள். அந்த நேசம் ’இஷ்க்’ - ’இறைக்காதல்’ எனப்படுகிறது. இறைவன் அவர்களை நேசிக்கிறான். அந்த நேசம் ‘விலாயத் (தோழமை/ நேசம்) எனப்படுகிறது. எனவே சூஃபிகளை ‘அவ்லியா’ (இறைநேசர்கள்) என்றும் அழைக்கிறோம். இந்த இறைநேசம் சூஃபிகளின் வழியே படைப்புக்களின் மீது பிரதிபலிக்கிறது. அதனை ‘கராமத்’ என்கிறோம். இந்த மூன்றாவது கட்டம்தான் சூஃபிகளை மனிதகுலத்தின் தொண்டர்களாக இயங்க வைக்கிறது.

”படைப்புக்கள் இறைவனின் குடும்பமாகும்” (அல்-ஃகல்கு இயாலுல்லாஹ்) என்பது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் அருள்மொழி.

“படைப்பினங்கள் அடங்கலும் அல்லாஹ்வுடைய குடும்பமாகும். குடும்பம் என்று சொன்னால், கணவன் – மனைவி சேர்ந்து வாழும் குடும்பம் அல்ல. எல்லாம் அவனுடைய ஞானப் பூங்காவிலிருந்த வஸ்துகளாகும் என்ற பொருளாகும். ஒரு குடும்பம் நிம்மதியாக இருப்பதற்கு அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். எனவே அனைவரையும் நேசிப்பது நம் மீது கடமையாகும்.


​​அனைத்து சிருஷ்டிகளின் ஞானங்களும் அதைப் படைத்த இறைவனின் ஞானமும் (ஆன்மிகம்) அறிந்த மனிதர்கள்தான் ஆன்மிகவாதிகள். அவர்களின் நோக்கமே எல்லோரும் நலமாக இருக்க வேண்டும். காரணம் எல்லோரும் அவன் படைப்புகள்.

இந்த அடிப்படையில்தான் இந்தியாவின் மாபெரும் சூஃபி ஞானியான காஜா மொய்னுதீன் சிஷ்தி றஹிமஹுல்லா அவர்கள் இப்படிக் கொள்கை வகுத்தார்கள்: “அனைவருக்கும் அன்பு; ஒருவர்மீதும் பகையில்லை”.

’அப்படியானால் சூஃபிகளுக்குக் கோபமே வராதா? அல்லது அவர்கள் வீரவுணர்வை ஒருபோதும் வெளிப்படுத்த மாட்டார்களா?’ என்று கேட்கலாம். தீமைக்கு எதிராகப் போராடுவதற்குத் தேவைப்படும்போது அவர்கள் வீரத்தை வெளிப்படுத்தவே செய்வார்கள். அது உலக அமைதியை உண்டாக்கவும், நீதியை நிலைநாட்டவுமாக இருக்கும். அந்த அடிப்படையில் அப்படியான போராட்டங்களும் ’கராமத்’ என்றே சொல்லப்படுகின்றன. அறத்தை நிலைநாட்டும் அத்தகைய மறவுணர்வும்கூட அன்பின் வெளிப்பாடு என்றே சூஃபிகள் காண்கிறார்கள். ஏனெனில் ஆன்மிக வாழ்வின் ஆதார உணர்வு அன்பே ஆகும்.

’படைக்குப் பிந்து, பந்திக்கு முந்து’ என்று ஒரு அழகான பழமொழி உண்டு. பகையைத் தள்ளிப்போடு, உறவை உடனே உருவாக்கு என்பதுதான் அதன் உள்ளர்த்தம். வேறு வழியே இல்லை என்னும் நிலையில் தீமையை அழிக்க ஆயுதம் ஏந்துவதில் தவறில்லை. எனினும் அதன் நோக்கம் அமைதியை ஏற்படுத்துவதாகவே இருக்க வேண்டும். “வாளைவிட வாளின் நிழலை நீங்கள் தேர்ந்து கொள்ளுங்கள்” என்பது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் அருள்மொழி. இதன் அடிப்படையில்தான் சூஃபிகள் அன்பின் வழிமுறையே சிறந்தது என்று தெளிந்து தேர்ந்துள்ளார்கள்.

”இறைவனின் குணங்களில் உன்னை உருவாக்கிக்கொள்” (தஃகல்லகூ பிஅஃக்லாக்கில்லாஹ்) என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நவின்றுள்ளார்கள். இறைவனின் திருப்பண்புகளைக் குறிக்கும் ‘அழகிய திருநாமங்கள்’ (அஸ்மாஉல் ஹுஸ்னா) தொண்ணூற்றொன்பது என்று அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அவை திருக்குர்ஆனில் பல இடங்களில் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு படைப்பிலும் அந்த இறைப் பண்புகள் சிலவோ, பலவோ ஏதேனுமொரு வகையில் செயல்படுகின்றன. அவற்றில் ஒன்று அல்லது சில மிகைத்து நிற்பதும் உண்டு.

உதாரணமாக, இறைவனின் திருநாமங்களில் ஒன்று “அர்-ரஸ்ஸாக்”. இதன் வெளிப்படையான பொருள் “உணவளிப்பவன்” என்பது. இந்தத் திருநாமம் யாரில் மிகைத்திருக்கிறதோ அவர்கள் உயிர்களுக்கு உணவு கொடுக்க வேண்டும் என்னும் சிந்தனையிலும் செயலிலும் பேரார்வமுள்ளவர்களாக இருப்பார்கள்.

இப்படி இறைப்பண்புகளைக் குறிக்கும் திருநாமங்கள் தொண்ணூற்றொன்பது இருப்பினும் இறைவனின் சுயத்தைக் குறிக்கும் “அல்லாஹ்” என்னும் திருப்பெயருடன் இணைந்த ஒருநாமம் “ரஹ்மான்” (அளவற்ற அருளாளன்) என்பதே. எப்படி எனில், திருக்குர்ஆனின் ஆரம்பமாகவும், அதன் அத்தியாயங்களின் (ஒரு அத்தியாயத்தைத் தவிர) ஆரம்ப மந்திரமாகவும், முஸ்லிம்கள் செய்யும் அனைத்து செயல்களின் துவக்க மந்திரமாகவும் இருப்பது “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்” என்பது. “அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமான அல்லாஹ்வின் நாமத்தால்” என்பது இதன் அர்த்தம்.

அல்லாஹ் வானங்கள் மற்றும் பூமியின் ஒளியாக இருக்கிறான்’ – திருக்குர்ஆன் 24:35

ஆக, இறைவனின் திருநாமங்களுள் அன்பு, அருள், கருணை, நேசம் ஆகிய அர்த்தபாவங்களைக் கொண்டுள்ள ரஹ்மான் என்னும் திருப்பெயர் விசேஷமானது. இறைவனின் உள்ளமைப் பெயரோடு இணைத்துச் சொல்லப்படுவது. அதாவது, இறைவனின் சுயம் கருணை மயமானது, அன்பு மயமானது என்பது குறிப்பு.

காதலை அடிப்படையாக வைத்து இறைவனை விளக்கிய சூஃபித்துவச் சிந்தனைப் பள்ளிகள் ‘மகாகுரு’ ஷைகுல் அக்பர் என்று போற்றப்படும் முஹ்யித்தீன் இப்னுல் அரபி றஹிமஹுல்லா அவர்களின் விளக்கங்களில் இருந்து வளர்ந்தவை.

சூஃபிகள் இறைவனின் காதலர்கள் (Sufis are lovers of God) என்று சொல்லப்படுவதன் பின்னணி இதுதான். மற்றபடி, காதல் என்னும் வார்த்தை இன்று பொதுமக்களின் வழக்கில் அடைந்துள்ள மேலோட்டமான பொருளில் எடுத்துக் கொள்ளக்கூடாது. சூஃபிகள் வெறுமனே கடலைப் பார்த்துக்கொண்டு கடற்கரையில் கடலை போடும் காதலர்கள் அல்ல. இறைக்கடலில் மூழ்கி ஞான முத்துக்களை எடுத்துவரும் காதலர்கள். (’இணங்கு மெய்ஞ்ஞானப் பேரின்பக் கடலின் இன்னமுது எடுத்தெமக்கு அளிப்போன்’ என்று குணங்குடி மஸ்தான் தன் குருவைப் பற்றிச் சொல்கிறார்.)

திருக்குர்ஆன் துவக்க மந்திரத்தில் அல்லாஹ் என்னும் சுயப்பெயருடன் ரஹ்மான் என்னும் திருப்பெயர் இணைந்துள்ளது என்றால், அதனை அடுத்து இணைந்துள்ள பெயர் ‘ரஹீம்’ என்பதாகும். இவ்விரு திருப்பெயர்களின் வேர்ச்சொல் ’ரஹிம’ என்பது. ’ரஹிம்’ அல்லது ‘ரிஹ்ம்’ என்றால் கருவறை என்றும் ரத்த உறவு என்றும் பொருள்.


​​எனவேதான் இறைவன், “நான் ரஹ்மான். நான் ரத்த உறவைப் படைத்து அதன் பெயரை என் பெயரிலிருந்து வைத்துள்ளேன். எவர் அதைப் பேணுகின்றாரோ அவரை நான் பேணுகிறேன், எவர் அதைத் துண்டிக்கின்றாரோ அவரை நான் தண்டிக்கிறேன்” என்று சொல்வதாக நபிகள் நாயகம் நவின்றார்கள். (ஹதீஸ் குத்ஸி, நூல்கள்: அதபல் முஃப்ரத், அஹ்மத், அபூதாவூத், திர்மிதி)

’சிருஷ்டிகள் அனைத்தும் இறைவனின் கருணையால், அன்பால் படைக்கப்பட்டுள்ளன. அவை ஒன்றோடொன்று உறவு கொண்டவையாக உள்ளன’ என்று எளிமையாகவும் சுருக்கமாகவும் இவ்விஷயத்தைப் புரிந்துகொள்ளலாம். “படைப்புக்கள் அனைத்தும் இறைவனின் குடும்பம்” (அல்-ஃகல்கு இயாலுல்லாஹ்) என்னும் நபிமொழியும், அதனால் சகல சிருஷ்டிகள் மீதும் அன்பு செலுத்த வேண்டும் என்னும் விளக்கமும் இந்த மந்திரத்தின் உட்பொருள் விளக்கங்களே என்பதை அறிந்து கொள்ள முடியும்.

இதுவரை சொன்னதிலிருந்து சூஃபி என்பவர் பற்றி நேசம்/ அன்பு/ காதல் என்னும் அடிப்படையில் மூன்று கருத்துக்களைச் சொல்லலாம்:

சூஃபி என்பவர் இறைவனை ஆழமாக நேசிப்பவர்.

சூஃபி என்பவர் இறைவனால் நேசிக்கப்படுபவர்.

சூஃபி என்பவர் படைப்புக்கள் அனைத்தின்மீதும் அன்பு காட்டுபவர்.

“ஏகமாய்க் காண்பதே காட்சி” என்று சொல்லப்படுகிறதே, அந்த அகக் காட்சியை சூஃபிகள் அன்பின் வழியிலேயே அடைந்து கொண்டார்கள். “அனைத்து சிருஷ்டிகளின் அடிப்படையாய் உள்ள பரம்பொருள் ஒன்றே” என்னும் ஞானத்தை அன்பினால் உணர்ந்து அறிவில் தெளிந்து அதிலேயே ஊறித் திளைத்தார்கள். அந்த ஏகத்துவ உள்ளமை ஞானம் அவர்களில் எந்த அளவுக்குச் சுடர்ந்து கொண்டிருந்தது என்பதை விளங்க அன்னவர்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் நடந்தேறிய எத்தனையோ சம்பவங்களை உதாரணமாக கூற முடியும்.

அன்னவர்களின் வாழ்க்கை நடை முறையை பின் பற்றி வாழ்ந்து மீட்சி பெறும் பாக்கியத்தை நம் அனைவருக்கும் வல்ல அல்லாஹ்தாலா நாயன் தந்து அருள் பாலிப்பானாக! ஆமீன் யாரப்பல் ஆலமீன்!

தரீக்கா என்றால் என்ன  (TARIQA)


இஸ்லாமிய ஆன்மீக கல்லூரிகளான தரீக்காக்களை பற்றி அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.


​​​​​

ஸுfபி ஞானத்தின் பிறப்பிடம் மஸ்ஜிதுன் நபவி​

​ 

அஸ்ஹாபுஸ் ஸுfப்fபா - திண்ணைத் தோழர்கள் என அழைக்கப்படும் ஸஹாபாக்கள் மூலம் சூfபி ஞானகலை உருவாகியதை அறிந்துக்கொள்ள இந்த ஆக்கத்தை வாசியுங்கள்.

நான் யார்?

​ 

நான் உடல் அல்ல? நான் மனம் அல்ல? நான் சிந்தனையும் அல்ல?  நான் யார்? என்பதை அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

சூபிசம் என்றால் என்ன (SUFISM)


சூபிசம் என்றால் என்ன? சூபிசம் போதிப்பது என்ன? சூபிகள் என்றால் யார்? சூபித்துவத் தரீக்காக்கள் பற்றிய அறிமுகம் ஆகியவற்றை அறிந்து கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.