MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
மகா வீரனும் பெரிய யுத்தமும் எது?
எழுதியவர்: மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.
இஸ்லாம் கூறும் மகாவீரனும் பெரிய யுத்தமும் எது என்பது பற்றி ஓர் ஆய்வு
♦ “நஃப்ஸ் அம்மாரா” எனும் சக்தி நமது இச்சைகளையும் ஆசைகளையும் தூண்டி விட்டு வணக்க வழிபாடுகளை மறக்கச் செய்து, இறைவனின் பக்கம் செல்லவிடாமல் தடுத்து உலக ஆசாபாசங்களின் பக்கம் இழுத்துக் கொண்டு, இறைவனின் நல்வழியில் செல்ல விடாமல் மனிதனை தடுத்து விடுகிறது.
அதன் தீமைகளையும் அதனுடைய மோசங்களையும் ஏமாற்றுதல்களையும் விளங்கி நான் என்ற அகந்தையும், கர்வமும், காம இச்சையும் இருக்கும் வரை உண்மையான இறை வழிபாடு செய்ய முடியாது என்பதை உணர்ந்து, அதன் தீய சக்தியை ஒடுக்கி தகர்த்து மனிதனை நல்வழிபடுத்த தனது நப்ஸ் என்ற மனோ இச்சையுடன் போராடி மாபெரும் யுத்தம் செய்வதன் மூலம் வெற்றி பெற்று.
சில விடயங்களை தியாகம் செய்து விட்டு, கோபம் வரும் போது பொறுமையை கடைபித்து சதா நிலைத்திருக்கும் இறைவனின் அன்பிலும் பாசத்திலும் லயித்திருப்பதே ஜிஹாதுல் அக்பர் எனும் பெரும் யுத்தம் என்று இஸ்லாம் குறிப்பிடுகின்து.
ஸூஃபியாக்கள், வலிமார்கள், காமிலான ஷெய்குமார்கள் இறைவனை நெருங்கவிடாமல் தடுக்கும் மேலே குறிப்பிட்ட நப்ஸ் மூலம் ஏற்படும் கோபம், நான் என்ற அகந்தையும் அதுபோன்ற தடுப்புகளையெல்லாம் தகர்த்து, மனிதவர்க்கத்தை இறைவனுக்கு மிக நெருக்கமானதாக ஆக்கும் ஆற்றலை இறைவன் அவர்களுக்கு வழங்கியுள்ளான். அவர்கள் தங்களது கலப்பற்ற இறையன்பைக் கொண்டு தங்களை முழுமையாக இறைவனிடம் அர்ப்பணித்தவர்களாய் சதா அல்லாஹ்வின் நினைவிலேயே மூழ்கியிருப்பார்கள். இப்படிப்பட்டவர்களே மகாவீரர்கள் என்று இஸ்லாம் குறிப்பிடுகின்றது.
புனிதர்களான “ஸூஃபி” எனும் இறைநேசர்கள் சகலவித உல்லாசங்களையும் இன்பங்களையும் நப்ஸூடன் மாபெரும் யுத்தம் செய்வதன் மூலமும், கோபத்தின் போது பொறுமையை கடைப்பிடித்தும் சதா நிலைத்திருக்கும் இறைவனின் அன்பிலும் பாசத்திலும் லயித்திருப்பார்கள்.படைத்தவனாகிய அல்லாஹ்விடமே அடைக்கலமாகி உண்மையான நிம்மதியும் ஆத்மசாந்தியும் திருப்தியும் அடையப்பெற்றவர்களாக இருப்பார்கள். இதனால்தான் இவர்களுடன் அடைக்கலம் புகும். நிம்மதியிழந்த மனிதர்கள், அந்த இறைநேசர்கள் அடைந்தது போன்ற இறையன்பையும் மன நிம்மதியையும் பெறுகின்றனர்.
♦ இஸ்லாமிய வரலாற்றிலே பத்ர் யுத்தம் மிக பிரபலமானதும் பெரிய யுத்தமும் ஆகும். இப்படியான பெரியதோர் யுத்தத்தை வெற்றிகரமாக முடித்து திரும்பும் போதுநபிகள் கோமான் (ஸல்லலாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நாம் சிறிய யுத்தத்தில் இருந்து பெரிய யுத்தம் அளவில் மீண்டிருக்கிறோம் என்று சொன்னார்கள். சஹாபாக்கள் அதிர்ச்சியுடன் நாயகமே எத்தனை உயிர் தியாகம். எவ்வளவு பெரிய யுத்தம் இதை முடித்து நாம் திரும்பிக் கொண்டிருக்கிறோம் அப்படி இருக்க யாரஸூலல்லாஹ்! சிறிய யுத்தம் என்று சொல்கின்றீர்கள் என கேட்க பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள். வாளேந்தி போராடுவது பெரிய யுத்தமல்ல தனது நப்ஸ் என்ற மனோ இச்சையுடன் போராடுவதே பெரிய யுத்தம் என்று சொன்னார்கள்.
இதிலிருந்து மனோ இச்சையை கொள்வதே பெரிய யுத்தம், அதை செய்பவரே உயர்வான ஷஹீத் என்பது ஹதீஸ் மூலம் எமக்கு தெளிவாகி விட்டது. அவ்லியாக்கள் என்பவர்கள் இறை நேசத்தை பெற்ற நன்மக்கள் அவர்கள் தமது மனோ இச்சையை அழிக்காமல் அவனை நெருங்கி இருக்க முடியாது. அப்படி மனதோடு போராடி அதை வெல்லாதவர் ஒரு இறை நேசராக இருக்க முடியாது. அப்படி இரண்டு யுத்தத்தில் வெற்றி கொண்டவர்களே அல்லாஹ்வின் இறைநேசர்களாகிய வலிமார்களும் மகாவீரர்கள் என்று கருதப்படும்.
♦ இமாமுனா கஸ்ஸாலி ரஹிமஹுல்லாஹு அன்ஹு அவர்கள், உன்னுடைய நஃப்ஸை நீ கவனித்துக் கொண்டே இரு. அதன் மோசடிகளை விட்டும் அச்சமற்று இருந்து விடாதே. ஏனெனில், நஃப்ஸாகிறது எழுபது ஷைத்தான்களை விட மிக கெட்டதாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.
அந்த அடிப்படையில் மனிதன் எப்போதும் தன் நஃப்ஸுடன் போரிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்பதைக் குறித்து பின்வருமாறு ஞானிகள் கூறியுள்ளார்கள்.அல்லாஹ்வின் பால் நெருங்குகின்ற பாதையில் நடப்பதற்கு 'ஸுலூக்' என்று கூறப்படும். ஏழு நஃப்ஸுகள் உள்ளன. இந்த நஃப்ஸுகளை அறிவதற்கு முதலில் அல்லாஹ் நம்மை படைத்த நோக்கத்தை அறிவது அவசியமாகிறது. அல்குர்ஆனில் "இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை" (அல்குர்ஆன் : 51:56).
இந்த வசனத்திற்கு விளக்கம் கூறும் விரிவுரையாளர்கள் குறிப்பாக இமாம் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்: ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை அறிந்து வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை என்று கூறியுள்ளார்கள்.
மேலும் ஷைத்தான் மனிதனை ஆக்கிரமிப்பதற்கு அவனுடைய முதல் வேலை மனிதனுக்கு கோபத்தைச் சீண்டி விடுவதுதான். தேவையில்லாத விஷயத்திற்கு ஒருவர் கோபப்பட்டால் அவரிடம் ஷைத்தான் குடி கொண்டிருக்கிறான் என்பதை தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். எதிரில் யார் நிற்கிறார் என்று கூடத் தெரியாத அளவுக்கு கடும் சொற்களால் காயப்படுத்துவார். சிலவேளை அதையும் கடந்து சட்டைக் கையை மடக்கி முழங்கைக்கு மேல் உயர்த்திக் கொண்டு பாய்வதற்கும் தயாராகி விடுவார். அதே போல் கோபத்தினால் பல விபரீதமான காரியங்கள் நடப்பதை நாம் காண்கிறோம்.
♦ ஒருவன் தன்னை வீரன் என்று காட்டுவதற்காகவும் கோபத்தைக் காட்டுவான், இவருக்கு சமுதாயம் வீரன் என்று பட்டம் சூட்டி விடும். ஆனால் இஸ்லாத்தின் பார்வையில் இவன் வீரனல்ல. வீரன் என்பவன் யாரென்றால் தனக்கு கோபம் வரும் போது பொறுமையைக் கடைப்பிடிக்கக் கூடியவன் தான் வீரன் என்று இஸ்லாம் கூறுகிறது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், "அடித்து வீழ்த்துபவன் வீரனல்லன்'' என்று கூறினார்கள். மக்கள், "அப்படியானால், வீரன் என்பவன் யார், அல்லாஹ்வின் தூதரே?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், "கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே (வீரன் ஆவான்)'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஹழ்ரத் அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு
நூல்: முஸ்லிம் 5086
சிலருக்குச் சின்ன விசயத்திற்குக் கூட கடும் கோபம் ஏற்பட்டு நிதானம் இழந்து தடித்த வார்த்தைகளை விட்டு விடுகின்றனர். இதனால் அவர்கள் வருத்தப்படுகிறாரோ இல்லை பின்னாளில் யோசித்து இவரும் வருத்தப்படுவார்.
"தனது பலத்தால் (மனிதர்களை) அடித்து வீழ்த்துபவன் வீரன் அல்லன், உண்மையில் வீரன் என்பவன், கோபத்தின் போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான் என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹழ்ரத் அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு
நூல்: புகாரி 6114
♦ அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: யார் உண்மையான மனதுடன் இறை வழியில் வீரமரணம் அடைவதை வேண்டுகிறாரோ, அவர் அ(தற்குரிய அந்தஸ்)தை அடைந்துகொள்வார்; அவரை வீரமரணம் தழுவாவிட்டாலும் சரியே!
ஹழ்ரத் அனஸ் பின் மாலிக் (ரலியல்லாஹு அன்ஹு)
நூல்: முஸ்லிம் 3869
♦நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: யார் உண்மையான மனதுடன் இறைவனிடம் வீரமரணத்தை வேண்டுவாரோ, அவரை உயிர்த் தியாகிகளின் தகுதிகளுக்கு அல்லாஹ் உயர்த்துவான்; அவர் தமது படுக்கையில் (இயற்கை) மரணமடைந்தாலும் சரியே!
ஹழ்ரத் சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலியல்லாஹு அன்ஹு)
நூல்: முஸ்லிம் 3870
கோபம் மனிதனுக்குத் தேவைதான். தேவை இல்லை என்று கூறிட முடியாது ஆனால் அதை தேவைக்கேற்ப பிரயோகிக்க வேண்டும். பழி தீர்ப்பதை விட பொறுமையே சிறந்தது ஒருவரை பலிழிக்குப் பழிலி வாங்குவதை விட பொறுமையை கடைப்பிடிப்பதே சிறந்து என்று அல்லாஹ் கூறியுள்ளான்.
நீங்கள் தண்டிப்பதாக இருந்தால் நீங்கள் துன்புறுத்தப்பட்ட அளவுக்குத் தண்டியுங்கள்! நீங்கள் பொறுமையைக் கடைப்பிடித்தால் பொறுமையாளர்களுக்கு அதுவே சிறந்தது. பொறுமையைக் கடைப்பிடிப்பீராக! நீர் பொறுமையாக இருப்பது அல்லாஹ்விடமே உள்ளது. அவர்களுக்காகக் கவலைப்படாதீர்! அவர்கள் சூழ்ச்சி செய்வதால் சஞ்சலத்துக்கும் ஆளாகாதீர்! (அல்குர்ஆன் 16:126-127)
மேலும் கூண்டில் கிளியிருப்பது போல் மனிதனிலேயே தங்கியுள்ள நப்ஸு எந்த நேரத்தில் எந்த உருவத்தில் தீமை செய்யும் என்பதை அறிந்து கொள்ள முடியாது, காபீரை வாள்போன்ற ஆயுதத்தினால் வெட்டி விடலாம். ஆனால் நப்ஸ் என்பது வாள் போன்ற ஆயுதத்தினால் வெட்ட முடியாத ஒன்றாகும். ஒரு காபிரை வெட்டி வீழ்த்துவதை விட நப்ஸை வெட்டி வீழ்த்துவதுதான் மிகவும் சிரமமான பெரிய யுத்தமாகும் இந்த யுத்தத்தில் இருந்து வெற்றி பெற்றவன் மகாவீரன் ஆவான் இப்படிப்பட்டவர்களுக்கு ஈருலகிலும் மகத்தான வெற்றி உண்டு .
♦ நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இன்னோரு ஹதீஸில் உனது பகைவர்களில் உனக்கு மிகவும் கொடிய பகைவன் யாரெனில் உனது இரண்டு விலாவுக்கும் இடையிலுள்ள நப்சு ஆகும் என்று கூறியுள்ளார்கள். இந்த ஹதீஸில் திருக்கலிமாவை ஏற்றுக் கொள்ளாதவன் பகைவனாய் இருந்தாலும் நப்சானது அவனைவிட பகை கூடியதென்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் குறிப்பிட்டார்கள். எனவே பகை கூடியவனை வெற்றி கொள்வது பகை குறைந்தவனை வெற்றி கொள்வதை விட சிறந்ததென்பது தெளிவாகிவிட்டது.
ஆகவே பகை குறைந்த காபிரை வெற்றி கொண்டவர் ஷஹீது என்ற பதவியை பெற்று மரணத்தின் பின்னும் உயிரோடு இருக்கும் பட்சத்தில் பகை கூடிய நப்ஸுடன் போராடி பெரிய ஜிஹாத் செய்து அதை வெற்றி கொண்டவர் ஷஹீது எனற பதவியைப் பெற்று மரணித்தபின் உயிரோடு இருப்பது வியப்பொன்றுமில்லை.
போர்களத்தில் வாளேந்தி போரிடுவது சிறிய யுத்தம் என்பதும் நப்ஸுடன் போராடுவது பெரிய யுத்தம் என்பதும் அந்த யுத்தத்தில் கலந்து கொள்பவர்களும், கோபம் வரும் போது பொறுமையை கடைபிடிப்பவர்களும் மகாவீரர்கள் என்று மேலே கூறிய ஹதீஸ்களினால் நீரூபனமாகிவிட்டதால் சிறிய யுத்தம் செய்தவர் மரணத்தின்பின் உயிரோடு இருப்பதேபோல் பெரிய யுத்தம் செய்தவரும் உயிரோடு இருக்கிறார் என்பது குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை என்பதும் இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.
ஸுபிஸம் என்றால் என்ன? சூபிசம் போதிப்பது என்ன? சூபிகள் என்றால் யார்? சூபித்துவத் தரீக்காக்கள் பற்றிய அறிமுகம் ஆகியவற்றை அறிந்து கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.
உள்ளத்தை தூய்மைப்படுத்துவது எப்படி?
தஸ்கியதுன் நப்ஸ் எனும் (உள்ளத்தை) பரிசுத்தப்படுத்துவது, தூய்மைப்படுத்துவது எப்படி? என்பதை விளங்கிக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.
தன்னை அறிவதற்கு முதல் படி என்ன? என்பதை அறிய இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் எழுதிய இந்த சிறு கட்டுரையை வாசியுங்கள்.
நாம் யார்? மலக்கா? மிருகமா? ஷெய்த்தானா? எமது நிலை என்ன? என்பதை அறிந்துக்கொள்ள அறிவுலக மேதை இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் இந்த ஆக்கத்தை வாசியுங்கள்.