MAIL OF ISLAM

Knowledge & Wisdom



பெண்கள் பைஅத் செய்யலாமா?


​ எழுதியவர்: மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.


இஸ்லாத்தின் பார்வையில் ஆண்கள் பைஅத் செய்துகொள்வது போன்று பெண்களும் பைஅத் செய்துகொள்ளலாமா?

♣  பைஅத் என்றால் என்ன?

தரீக்காக்களில் பைஅத் செய்துகொள்வது இறைதூதரின் வழிமுறையைப் பின்பற்றி (பைஅதுல் அகபா) சூபியிஸத்தில் (தரீகாவில்) மிக முக்கியமான அம்சம், ஞான வழி பெரியார் ஒருவர் கண்காணிப்பில் தனது குணங்களை சரி செய்வதாகும். இதற்கு பைஅத் என்று கூறப்படுகிறது.


ஆன்மீக வழிகாட்டியான ஷெய்குவிடம் அவரைப் பின்பற்றும் சீடர்கள் இஸ்லாத்துக்கு முரணான சகல விடயங்களை, பித்அத்களை விட்டும் தவிர்ந்து வாழ்வதாகவும், உலக இன்பங்களில் மூழ்காது இஸ்லாத்துக்காக உழைப்பதாகவும் செய்துகொள்ளும் விசுவாசப் பிரமாணமே பைஅத் எனப்படுகின்றது.


இந்த பைஅத் மூலம் ஆத்மீக குருவுக்கும் சீடர்களுக்கும் ஒரு இறுக்கமான பிணைப்பு ஏற்படுவதோடு அவர்கள் ஒரு கட்டுக்கோப்பில் வாழவும் சந்தர்ப்பம் கிடைக்கின்றது.


ஒரு காமிலான ஷெய்கை பைஅத் செய்து கைப்பிடித்தவன் தன் ஷெய்கிடம் மிகவும் மரியாதையோடும், கண்ணியத்தோடும் நடந்து கொள்ள வேண்டும். ஷெய்கிடம் மரியாதைக் குறைவாகவோ, கண்ணியக் குறைவாகவோ நடப்பது அவனின் ஈமானை பாதித்து விடும். ஒருவன் ஷெய்கை எதிர்ப்பதால் அவனுடைய பைஅத் முறிந்து விடுகிறது. அவனுக்கும் அவன் ஷெய்குக்கும் உள்ள தொடர்பு அறுந்து விடும்.


அதாவது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் கொண்ட நேரடித் தொடர்பு அறுந்து விடும். ஒரு ஷெய்கால் வெறுத்து ஒதுக்கப்பட்டவனை வேறு எந்த ஷெய்காலும் முன்னேற்றப்பாதைக்கு கொண்டு செல்ல முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
ப்படுகிறது.

♦ ஷரீஅத், தரீகத் இவை இரண்டும் பின்னிப் பிணைந்த பிரிக்க முடியாத அம்சமாகும். ஷரீஅத் இல்லாமல் தரீகத் செல்ல முடியாது. தரீகத் இல்லாமல் ஷரீஅத் நிறைவடைய முடியாது. தரீகத்தில் சென்று விட்டோம். மெஞ்ஞானத்தில் மூழ்கி முக்தி பெற்று விட்டோம் என்று சொல்லி இனிமேல் ஷரீஅத் எங்களுக்குத் தேவையில்லை என்று போலித்தனமாக சொல்லி மக்களை ஏமாற்றி மாயவலையில் சிக்க வைத்து தான் ஒரு மெஞ்ஞானி, ஷெய்கு - குரு என்றும் தன் வாயில் வருவதுதான் மெஞ்ஞானம் என்றும் தன்னையே பின்பற்ற வேண்டும் என்றும் உண்மையான ஷரீஅத், தரீகத்தை பேணி நடந்து வரும் ஸூபிய்யாக்கள், ஷெய்குமார்களை ஏளனமாக கீழ்த்தரமானவர்களாக சித்தரித்து உலவி வருவது ஒரு கூட்டம்.


​​இப்போலி வேஷதாரிகளைப் பார்த்துவிட்டு உண்மையான ஷெய்குமார்கள் இக்காலத்தில் இல்லை. ஷெய்கும், தரீகத்தும் தேவையில்லை. எங்களுக்கு ஷரீஅத் மட்டும் போதும். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேரில் அதிகமாக ஸலவாத்து ஸலாம் சொல்லி வந்தால் போதும் என்று அப்பாவி மக்களின் உள்ளத்தில் பதித்து விட்டனர் வழிகெட்ட வஹ்ஹாபி கூட்டத்தினர்.

♦ ஷரீஅத், தரீகத், ஹகீகத், மஃரிபத் ஆகிய வழிகள் மூலம்தான் இறைவனளவில் போக முடியம் என்பது ஆரிபீன்களான மெஞ்ஞானிகளின் ஏகோபித்த முடிவு. எனவே இவ்வழி நடப்பவர்களுக்கு கண்டிப்பாக ஒரு (ஷெய்கு – குருவின்) கரம் பிடிப்பதென்பது இன்றியமையாத கடமை. இதன் அடிப்படையில்தான் கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்களும் சொன்னார்கள்.


​​அதை கவி நயமாக நமக்கு மாமேதை மகான் அல்லாமா ஸதக்கத்துல்லாஹ் அப்பா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்,

"எவர்களுக்கு ஷெய்கு -குரு இல்லையோ அவருக்கு நிச்சயம் நான் ஷெய்காகவும், - குருவாகவும் முர்ஷிதாகவும், வழிகாட்டியாகவும் இருக்கிறேன். அவரது கல்வத்திலும் - தனிமையிலும் அவரது உற்ற தோழனாகவும் இருக்கிறேன். என்னில் நின்றும் அவருக்கு தொடர்பு உண்டு என்று (கௌது நாயகமே!) நீங்கள் கூறியுள்ளீர்கள்" இப்படியே முஹ்யித்தீன் ஆண்டகையே எனக்கு ஆகுங்கள்' என்று பாடியுள்ளார்கள்,


​​மேலும் இறைவன் குர்ஆனில் கூறியுள்ளான் "அன்று (கியாமத் நாளில்) நாம் ஒவ்வொரு மக்களையும் அவர்களது தலைவர் (களின் பெயர்)களைக் கொண்டு அழைப்போம்" (அல்குர்ஆன் 17-71) என்று இறைவன் கூறியுள்ளான்.

♦ மேலே கூறப்பட்ட குர்ஆன் வசனத்தின் கருத்து: தரீகத் தலைவர்களின் பெயர்களைக் கொண்டு அதாவது காதிரிய்யா தரீகாகாரர்களே! ஜிஷ்திய்யா தரீகாகாரர்களே! நக்ஷபந்தியா தரீகாகாரர்களே! ஷாதுலிய்யா தரீகாகாரர்களே! என்று அழைப்பான் என்று சில விரிவுரையாளர்கள் இவ்வசனத்திற்கு கருத்துக் கொண்டுள்ளது கவனிக்கத்தக்கது.இறைவன் பக்கம் போய் சேருவதற்கு இறைத்தூதர்கள் அவசியமாக இருப்பது போல் இறைத்தூர்கள் பக்கம் போய் சேருவதற்கு ஷெய்குமார்கள் அவசியமாகும்.

♣ குருநாதரிடம் பெண்கள் எவ்வாறு (பைஅத் -தீட்சை) பெறவேண்டும் என்பது பற்றிய அத்தாட்சிகள்

♦ (நபி நாயகமே!) உங்களிடத்தில் (வெளிரங்கத்தில் கைகொடுத்து) பைஅத்து செய்கிறவர்கள் (எதார்த்தத்தில்) அல்லாஹ்விடத்தில் தான் பைஅத்து செய்கிறார்கள். (குறிப்புகளை விட்டும் பொதுவான) அல்லாஹ்வின் கை (வெளிப்பாடுகளில் நின்றுமுள்ள குறிப்பான) அவர்களது கைகளின் மீது இருக்கிறது. எவனொருவன் அ(ந்த பைஅத்)தை முறித்துக் கொண்டானேயானால் அவன் தன் மீதே (அவன் நஷ்டத்தை மீட்டி) முறித்துக் கொண்டான். எவனொருவன் எதன் மீது அல்லாஹு இடத்தில் உடன்படிக்கை செய்தானோ அதை நிறைவேற்றுவானேயானால் அல்லாஹ் அவனுக்கு மிகப் பெரிய கூலியைக் கொடுப்பான். (அல்குர்ஆன் 48:10)

அசலில் பைஅத் என்பது ஓர் மனிதன் தன்மீது ஒரு இமாமுக்கு (தலைவருக்கு) வழிப்பட்டு நடப்பதற்காக சில உடன்படிக்கைகளை செய்து அதை நிறைவேற்றி வருவதாகும். இவ்வசனத்தில் சொல்லப்பட்டது 'ஹுதைபிய்யா' எனும் இடத்தில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் சஹாபாப் பெருமக்கள் செய்து கொண்ட பைஅத்து றிழ்வானாகும். நற்காரியங்களில் ஒரு தலைவருக்கு இணங்கி நடப்பதற்காக உடன்படிக்கை செய்வதையும் ஒரு முரீது ஒரு ஷெய்குக்கு (அவர் இடும் நிபந்தனைகள், ஒழுக்க நெறிகளுக்கு) வழிப்பட்டு நடப்பதற்காக உடன்படிக்கை -பைஅத் செய்வதையும் இவ்வசனம் பொருந்திக் கொள்ளும். (மெஞ்ஞானிகளான) ஷெய்குமார்களும் முரீதீன்களிடம் பைஅத்து எடுக்கும்போது இவ்வசனத்தை (ஓதியும்) புழங்குகிறார்கள்.

தப்ஸீர் ஸாவி பாகம் 4, பக்கம் 97,98

மேற்கண்ட திருவசனம் ஆண்கள், பெண்கள் இருபாலர்களுக்கும் பொதுவானதாகத்தான் வந்துள்ளது. ஆண்களுக்கு மட்டும்தான் என்று வைத்துக் கொண்டாலும் பெண்கள் பைஅத் எடுப்பதற்கு மிக தெளிவாக கீழ்காணும் திருவசனம் அறிவிக்கின்றது. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் பெண்கள் பைஅத் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்த போது, அவர்களுக்கு பைஅத் செய்து கொடுக்குமாறு அல்லாஹ் அவர்களுக்கு உத்தரவு பிறப்பித்தான்.

♦ நபியே முஃமினான பெண்கள் அல்லாஹ்வுக்கு எப்பொருளையும் இணை வைப்பதில்லை என்றும், திருடுவதில்லை என்றும், விபச்சாரம் செய்வதில்லை என்றும், தன் பிள்ளைகளை கொலை செய்வதில்லை என்றும், கைகளுக்கும் கால்களுக்கும் மத்தியில் பிறந்த பிள்ளைகள் என்று (அதாவது தத்தெடுத்து வளர்த்த பிள்ளைகளை தங்கள் கணவன்மார்களுக்கு பிறந்த பிள்ளை என்று) படுதூறு சொல்ல மாட்டோம் என்றும், நற்காரியங்களில் உங்களுக்கு மாறு செய்ய மாட்டோம் என்றும் பைஅத் – உடன்படிக்கை செய்வதற்கு உங்களிடம் வந்தால் அப்பெண்களுக்கு பைஅத்-உடன்படிக்கை செய்யுங்கள். அவர்களுக்காக பிழை பொறுக்கத் தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனாகவும், மிகக் கிருபையாளனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 60:12)

இந்த பைஅத் இஸ்லாமான பிறகு தான் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. " ஈமான் கொண்ட பெண்கள் பைஅத் செய்ய வந்தால் என்ற வசனம் இக்கருத்தை ஊர்ஜிதம் செய்கிறது.

ஒருவர் இஸ்லாமாகி விட்டாலே இஸ்லாத்தின் எல்லா சட்டதிட்டங்களுக்கும் கட்டுப்பட்டவராகிறார். திரும்பவும் அவரிடம் பைஅத் செய்ய வேண்டிய அவசியமென்ன? இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் மட்டும் போதாது. தன்னை அகமும் புறமும் முற்றிலும் கண்காணிக்கும் நிலையிலுள்ள ஆன்மீகப் பெரியவரிடம் தன்னை ஒப்படைக்க வேண்டும் என்பதே பொருளாகும்.

பைஅத் செய்து கொடுப்பவர் தன்னிடம் தீட்சை பெற்றவர்களை முழுமையாக கண்காணித்து ஷரீஅத் சட்டத்தை முழுமையாக பேணி வரச்செய்வதுடன் முழுமையான குணசீலராக மாற்ற முயலுவார். மேலும் அவர்களின் குணமாற்றங்களுக்காக துஆ செய்து வருவார். இக்கருத்தை மேற்காணும் வசனத்தில் இடம் பெற்றுள்ள " வஸ்தஃபிர் லஹுன்னல்லாஹ் " என்ற வாக்கியம் குறிக்கிறது. ஆனால் இத்தகைய பயிற்சியாளர்கள் தற்காலத்தில் மிகவும் குறைந்து விட்டார்கள் என்பதற்காக அந்த கலை தேவையில்லாதது என்று கொள்ள முடியாது.

♦நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இத்திருவசனத்தின் படி பெண்களுக்கு சொல்வழியாக பைஅத் செய்தார்கள். கையினால் முஸாபஹா கைலாக்கு மூலமாக பைஅத் செய்யவில்லை என்றும், நபி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்கள் கையிற்கும் பெண்கள் கையிற்குமிடையில் ஆடை இருக்க (முஸாபஹா மூலம்) பைஅத் செய்தார்கள் என்ற ஹதீது அறிவிப்பு வந்துள்ளதினால் திரைவுடன் முஸாபஹா செய்து பைஅத் கொடுத்தார்கள் என்றும் வந்துள்ளது.

தப்ஸீர் ஸாவி பாகம் 4 பக்கம் 200

♦ உம்மு அதிய்யா ரலியல்லாஹு தஆலா அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்:- நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனா நகருக்கு வந்த பொழுது அன்ஸார் பெண்களை ஓர் வீட்டில் ஒன்று கூட்டினார்கள். பின்பு உமர் இப்னுல் கத்தாப் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களை எங்கள் பக்கம் (அவ்வீட்டின்) வாசல் அருகாமையில் அனுப்பினார்கள். எங்களுக்கு (உமர் இப்னுல் கத்தாப் அவர்கள்) சலாம் சொன்னார்கள். நாங்களும் பதில் சலாம் சொன்னோம். பின்பு, நான் உங்கள் பக்கம் அல்லாஹ்வின் தூதரின் தூதராக வந்துள்ளேன் என்று மேற்கண்ட (அல்குர்ஆன் 61:12) திருவசனத்தை ஓதினார்கள். (அதற்கு நாங்கள் சம்மதம் தெரிவித்து) ஆம் என்று சொன்னோம். பின்பு வாசலின் வெளிப்புறத்தில் இருந்து கொண்டு அவர்களது கையை நீட்டினார்கள். நாங்களும் வீட்டின் உட்பகுதியில் இருந்து கொண்டு கைகளை நீட்டினோம். (கைகளை நீட்டியது சம்மதத்தை தெரிவிக்கவும், பைஅத் நடந்ததை அறிவிக்கவும் ஆகும். கையை திரையின்றி தொட்டார்கள் என்பதை அறிவிக்காது.) பின்பு இறைவா! நீ சாட்சி என்று சொன்னார்கள்.(தப்ஸீர் ஸாவி பாகம் 4 பக்கம் 200, இதே கருத்து விபரமாக பத்ஹுல் பாரி ஷரஹுல் புகாரி பாகம் 8 பக்கம் 505 யிலும் தப்ஸீர் குர்துபி பாகம் 9 பக்கம் 243 லும் வந்துள்ளது) திரையின்றி எந்த (அன்னியப்)பெண்ணையும் கையினால் தொடவில்லை என்பதுதான் உறுதியான அறிவிப்பாகும்.

♦அன்னை ஆயிஷா ரலியல்லாஹு தஆலா அன்ஹா அவர்கள் பெண்கள் பைஅத் செய்வதைப் பற்றி அறிவிக்கிறார்கள்: மேற்கண்ட (அல்குர்ஆன் 61:12) திருவசனத்தைக் கொண்டு பெண்களை சோதிப்பார்கள். எப்பெண்கள் இந்த நிபந்தனைகளை ஒப்புக் கொள்கின்றனரோ அவர்களுக்கு 'நிச்சயமாக உங்களுக்கு பைஅத் எடுத்துக் கொண்டேன்' என்று சொல்வார்கள். அல்லாஹ்வின் ஆணையாக பைஅத் செய்யும் போது எந்தப் பெண்ணின் கைகளை நாயகத்தின் கை அறவே (திரையின்றி) தொடவில்லை.

நூல்: மிஷ்காத் ஹதீது எண் 4043. புகாரி ஹதீது எண் 4891, மேலும் பார்க்க புகாரி 5288

​♣ பைஅத் செய்து கொள்ளும் ஒழுங்கு முறைகள் 

மேலே கூறப்பட்ட ஹதீஸ்கள் அடிப்படையில் அமைப்பில் மெஞ்ஞானிகளான ஸூபிய்யாக்கள் ஆண்களுக்கு திரையில்லாமல் முஸாபஹா செய்வது போல் கைகளை கைகளோடு சேர்த்தும், பெண்களுக்கு திரை மறைவுடன் துணியில் ஒரு பக்கம் தன் கைகளிலும் மறுபக்கம் பெண்களின் கைகளிலும் பிடித்துக்கொண்டு பைஅத் செய்கிறார்கள். இதுதான் உண்மையான வழிமுறையாகும். அல்ஹம்துலில்லாஹ்.'பைஅத் செய்யும் போது சுன்னத்தான குத்பா ஓத வேண்டும். பின் ஈமானைப் பற்றி எடுத்துச் சொல்லி கொடுக்க வேண்டும். பின் ஷஹாதத் கலிமா சொல்லிக் கொடுக்க வேண்டும். பின்பு பைஅத் – உடன்படிக்கை செய்து கொண்டோம் என்று சொல்ல வேண்டும். பின் (அல்குர்ஆன் 5:35, 48:10) ஆகிய இரு திருவசனங்களை ஓத வேண்டும்' என்ற ஒழுங்கு முறையை நம் சங்கைமிகு ஷெய்குமார்களில் ஒருவரான மகான் ஷாஹ் வலியுல்லாஹ் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் எழுதியுள்ளார்கள்.

நூல்: ஷிபாவுல் அலீல் பக்கம் 27

ஆகவே ஓர் காமிலான ஷெய்கை - குரு நாதரை தேர்ந்தெடுத்து அவர் கையைப் பற்றி பிடித்து அவர் செல்லும் வழியில் நம்மை முழுமையாக ஒப்படைத்து நல்லோர்களான மெஞ்ஞானிகளின் ஞானத்தை பெற்று முக்தி சித்தியடைய எல்லாம் வல்ல கிருபையாளன் நல்லுதவி செய்வானாக! ஆமீன்.


​​எல்லாம் வல்ல கிருபையாளன் நம்மனைவர்களையும் அவனது அருள்மாரியைக் கொண்டு அவனது ஹபீப் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வஸீலா கொண்டும் கரம் பிடித்து கரை சேர்ந்த ஜெயசீலர்களின் கூட்டத்தில் சேர்த்து வைப்பானாக! ஆமீன்.

சூபிசம் என்றால் என்ன (SUFISM)


ஸுபிஸம் என்றால் என்ன? சூபிசம் போதிப்பது என்ன? சூபிகள் என்றால் யார்? சூபித்துவத் தரீக்காக்கள் பற்றிய அறிமுகம் ஆகியவற்றை அறிந்து கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

தரீக்கா என்றால் என்ன (TARIQA)


இஸ்லாமிய ஆன்மீக கல்லூரிகளான தரீக்காக்களை பற்றி அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.


​​​​​

பையத் என்றால் என்ன? (BAIYATH)


​பைஅத் என்றால் என்ன? பைஅத் ஏன் செய்ய வேண்டும் ? போன்ற விளக்கங்களை ஹதீஸ் ஆதாரத்தோடு அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

பெண் ஸுfபியாக்கள்


இஸ்லாத்தில் உள்ள சில பெண் ஸுபியாக்களின் பெயர்கள்  சிலவற்றை  இங்கு  வாசிக்கலாம்.