Sign-Up  |  Log-In








MAIL OF ISLAM
The Path to Paradise
© Copyright 2008-2013 www.mailofislam.com all rights reserved. Mail of Islam™ is trademark of Mail of Islam Organization.
சூரத்துல் ஹஷ்ர் – 59  (ஒன்று சேர்த்தல்)
(மதனீ) பிரிவு - 3, சொற்கள் – 445, வசனங்கள் – 24, எழுத்துகள் – 1913,


ருகூஃ 1

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்......

1. வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வை தஸ்பீஹ் செய்கின்றன: அவன் மிகைத்தவன்: ஞானமுள்ளவன்.

2. அவன்தான் வேதக்காரர்களில் காபிராகி விட்டார்களே அவர்களை அவர்களுடைய வீடுகளை விட்டும் முதன் முறையாக ஒன்று சேர்த்து வெளியேற்றினான்: அவர்கள் வெளியேறுவார்களென்று நீங்கள் எண்ணவுமில்லை: தங்களுடைய கொட்டைகள் அல்லாஹ்வை விட்டும் தங்களைத் தடுத்துக் கொள்பவை என்று நிச்சயமாக அவர்களும் எண்ணினார்கள்: எனினும், அவர்கள் நினையாத புறத்திலிருந்து அல்லாஹ் அவர்களிடம் (தண்டனையைக் கொண்டு) வந்து விட்டான்: இன்னும் அவர்களுடைய உள்ளங்களில் திகிலைப் போட்டான்: தம் கரங்களாலும், முஃமீன்களின் கரங்களாலும் தம் வீடுகளைப் பாழாக்கி கொண்டனர் – அகப்பார்வை உடையவர்களே, படிப்பினை பெறுவீர்கள்!

3. அல்லாஹ் அவர்களின் மீது நாடுகடத்தலை விதிக்காதிருந்தால் இவ்வுலகிலேயே அவர்களை வேதனை செய்திருப்பான்: மேலும் மறுமையில் அவர்களுக்கு நரக வேதனையும் உண்டு.

4. இது, (ஏனெனில்) நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய ரஸூலுக்கும் மாறு செய்தார்கள் என்பதினாலேயாகும்: எவர் அல்லாஹ்வுக்கு மாறு செய்கிறாரோ (அத்தகையோரை) நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் மிகக் கடினமானவன்.

5. (முஸ்லிம்களே,) நீங்கள் (அவர்களுடைய) பேரீத்த மரங்களை வெட்டியதோ, அல்லது அவற்றின் வேர்களில் மீதே நிற்கும்படியாக அவற்றை நீங்கள் விட்டு வைத்ததோ அல்லாஹ்வுடைய கட்டளையைக் கொண்டேயாகும்: (அன்றியும்) பாவம் செய்கிறவர்களை அவன் இழிவு படுத்துவதற்காகவும்.

6. அவர்களிடமிருந்து அல்லாஹ் தன ரஸூலுக்கு மீட்டுக் கொடுத்தது (இருக்கிறதே) அதற்காக(ப் போரிட) நீங்கள் எந்தக் குதிரையையும் எந்த ஒட்டகத்தையும் ஓடச் செய்யவில்லை: எனினும், அல்லாஹ் தன ரஸூல்களைத் தான் நாடியவர்கள் மீது அதிகாரம் செலுத்தச் செய்கிறான் – அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் வல்லமையுடையவன்.

7. அச்சிற்றூர்க்காரர்களிடமிருந்து அல்லாஹ் தன்னுடைய ரஸூலுக்கு மீட்டுக் கொடுத்தவை அல்லாஹ்வுக்கும் (அவன்) ரஸூலுக்கும் (அவர்) உறவினர்களும், அநாதைகட்கும், மிஸ்கீன்களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் உரியவையாகும் – (ஏனெனில் பொருள்) உங்களில் செல்வந்தர்களுக்கு மத்தியில் (மட்டும்) சுற்றி வருவதை ஆகாமலிருப்பதற்காக: (அன்றியும் நம்) ரஸூல் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதனை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்: எதனை விட்டும் உங்களை அவர் தடுத்தாரோ (அதனை விட்டும்) விலகிக் கொள்ளுங்கள் – அல்லாஹ்வை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள்: நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் மிகக் கடினமானவன்.

8. தம் வீடுகளையும், தம் பொருட்களையும் விட்டு (அநியாயமாக) வெளியேற்றப்பட்டார்களே அத்தகைய முஹாஜிர்களான ஏழைகட்கும் (அப்பொருளில் பங்குண்டு): அல்லாஹ்விடமிருந்து கிருபையையும், திருப்பொருத்தத்தையும் அவர்கள் தேடுகின்றனர்: இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய ரஸூலுக்கும் உதவி செய்கின்றனர் – அவர்கள் தாம் (தம் ஈமானில்) உண்மையாளர்கள்.

9. இன்னும் (மக்காவாசிகளாகிய) அவர்களுக்கு முன்னதாகவே, (மதீனாவில்) வீட்டையும், ஈமானையும் அமைத்துக் கொண்டார்களே அவர்களுக்கும் (அதில் பங்குண்டு): அவர்கள் தங்களின்பால் ஹிஜ்ரத்து செய்து வந்தவர்களை நேசிக்கின்றனர்: இன்னும் (மக்காவாசிகளாகிய) அவர்களுக்குக் கொடுக்கப்பட்டதிலிருந்து தம் நெஞ்சங்களில் எவ்விதத் தேவையும் (பொறாமையும்) காணமாட்டார்கள்: மேலும் தங்களுக்குத் தேவையிருந்தாலும் சரி, தங்களைவிட (மக்காவாசிகளாகிய அவர்களுக்குக் கொடுப்பதையே) தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள் – எவர் தம் மனத்தின் உலோபத் தனத்தை விட்டும் பாதுகாக்கப்படுகிறாரோ, அவர்கள் தாம் வெற்றியாளர்கள்.

10. இன்னும், அவர்களுக்குப்பின் வந்தார்களே அவர்களுக்கும் (அதில் பங்குண்டு): அவர்கள் கூறுவார்கள்: “எங்களுடைய ரப்பே! எங்களையும், ஈமானில் எங்களுக்கு முந்திவிட்டார்களே அத்தகைய எங்களுடைய சகோதரர்களையும், நீ மன்னித்தருள்வாயாக! ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய ரப்பே! நிச்சயமாக நீ இரக்கமுள்ளவன்: மிகக் கிருபையுடையவன்:

ருகூஃ 2

11. முனாபிக்கானவர்களை (நபியே!) நீர் பார்க்கவில்லையா? வேதக்காரர்களில் காபிர்களாகிவிட்ட தம் சகோதரர்களை நோக்கி: “நீங்கள் (மதீனாவை விட்டு) வெளியேற்றப்பட்டால், உங்களுடன் நாங்களும் திண்ணமாக வெளியேறி விடுவோம்: உங்களுடைய விஷயத்தில் (சதிசெய்யும்) எவருக்கும் எப்பொழுதும் நாங்கள் உடன்பட மாட்டோம்: உங்களுடன் போர் தொடுக்கப்பட்டால் திண்ணமாக நாங்கள் உங்களுக்கு உதவி செய்வோம்” என்று அவர்கள் கூறுவார்கள்: (எனினும்) நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள் என்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான்.

12. (மதீனாவை விட்டு) அவர்கள் வெளியேற்றப்பட்டால், அவர்களுடன் இவர்கள் வெளியேறமாட்டார்கள்: அவர்களுடன் போர் தொடுக்கப்பட்டால், இவர்கள் அவர்களுக்கு உதவி செய்யவும் மாட்டார்கள்: (அவ்வாறு) அவர்களுக்கு இவர்கள் உதவி செய்தாலும் திண்ணமாக அவர்கள் புறமுதுகு காட்டித் திரும்பி விடுவார்கள்: பிறகு அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள்.

13. உறுதியாக நீங்கள் (முனாபிக்குகலான) அவர்களுடைய நெஞ்சங்களில், அல்லாஹ்வை விடக் கடினமான பயமுள்ளவர்கள் (ஆக இருக்கிறீர்கள்): இது (ஏனெனில்) நிச்சயமாக அவர்கள் விளங்காத கூட்டத்தினர் என்பதினாலேயாகும்.

14. அரண் அமைக்கப்பட்ட ஊர்களிலோ, அல்லது சுவர்களுக்குப் பின்னாலிருந்தோ அன்றி அவர்கள் அனைவரும் (ஒரு சேர) உங்களிடம் போர் செய்ய மாட்டார்கள்: அவர்களுக்கு மத்தியிலே (அவர்கள் தமக்குள்ள செய்து கொள்ளும்) அவர்களுடைய போர் கடினமானதாகும்: அவர்களை ஒன்றுபட்டிருப்பவர்களாக நீர் எண்ணுகிறீர்: (எனினும்) அவர்களுடைய இதயங்கள் பிரிந்து கிடக்கின்றன: இது (ஏனெனில்) நிச்சயமாக அவர்கள் அறிவில்லாக் கூட்டத்தினர் என்பதினாலேயாகும்.

15. (இவர்களுக்கு உதாரணம்) இவர்களுக்கு முன்னர் அண்மையில் (பத்ருப் போரில்) தங்களுடைய காரியத்திற்குரிய தண்டனையைச் சுவைத்தனரே அத்தகையோரைப் போன்றதாகும்: இன்னும் அவர்களுக்கு நோவினை தரும் வேதனையமுண்டு.

16. இன்னும் (இவர்களுக்கு உதாரணம்:) ஷைத்தானைப் போன்றதாகும்: மனிதனை நோக்கி, “நீ காபிராகி (நிராகரித்தவனாகி) விடு” என்று அவன் சொன்னான்: அவ்வாறு அவன் ( -மனிதன்) நிராகரித்தபோது, “நிச்சயமாக நான் உன்னை விட்டும் நீங்கியவனாவேன்: நிச்சயமாக நான் அகிலத்தோருக்கெல்லாம் ரப்பாகிய அல்லாஹ்வை நான் பயப்படுகிறேன்” என்று அவன் கூறினான்.

17. பின், நிச்சயமாக அவ்விருவரும் (சைத்தானும், நிராகரித்த மனிதனும்) நரகத்தில் – அதில் நிரந்தரமாக இருப்பார்கள் என்பது அவ்விருவருடைய முடிவாக ஆகிவிட்டது: இது அநியாயக்காரர்களுடைய கூலியாகும்.

ருகூஃ 3

18. முஃமின்களே! அல்லாஹ்வை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள்: ஒவ்வோர் ஆத்மாவும் நாளை (மறுமை)க்காக எதனை முற்படுத்தி வைத்துள்ளது என்பதை கவனித்துப் பார்க்கவும்: இன்னும் அல்லாஹ்வை அஞ்சுங்கள்: நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்கின்றவற்றை நன்கு தெரிந்தவனாக இருக்கிறான்.

19. அல்லாஹ்வை மறந்து விட்டார்களே அவர்களைப் போன்று நீங்கள் ஆகி விடாதீர்கள். பின்னர் அவர்களைத் தங்களையே (நன்மைகளை முற்படுத்தி வைப்பதை விட்டும்) அவன் செய்து விட்டான் – அவர்கள் தாம் பாவிகள்.

20. நரகவாசிகளும், சொர்க்கவாசிகளும் சமமாக மாட்டார்கள் – சொர்க்கவாசிகள் – அவர்கள்தாம் வெற்றியாளர்கள்.

21. (நபியே!) இந்தக் குர்ஆனை ஒரு மலையின் மீது நாம் இறக்கி வைத்திருந்தால், அதனை – அல்லாஹ்வுடைய பயத்தினால் நடுங்குகிறதாகவும், பிளந்து விடுவதாகவும் நீர் காண்பீர்: இன்னும் இந்த உதாரணங்கள் – அவற்றை மனிதர்களுக்காக, அவர்கள் சிந்தித்துப் பார்க்கும் பொருட்டு நாம் விளக்குகிறோம்.

22. அவன்தான் அல்லாஹ்: அவன் எத்தகையவனென்றால் அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) வேறு எந்த நாயனும் இல்லை: (அவன்) மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிகிறவன்: அவன் அளவற்ற அருளாளன்: மிகக் கிருபையுடையவன்.

23. அவன்தான் அல்லாஹ் – அவன் எத்தகையவனென்றால் அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) வேறு எந்த நாயனும் இல்லை: (அவன்) பேரரசன்: மிக்கப் பரிசுத்தமானவன்: சாந்தி மயமானவன்: பாதுகாப்பளிக்கிறவன்: அபயமளிக்கிறவன்: (யாவற்றையும்) மிகைத்தவன்: அடக்கியாள்கிறவன்: பெருமைக்குரியவன் – அவர்கள் இணை வைப்பவற்றை விட்டும் அல்லாஹ் மகாத் தூய்மையானவன்.

24. அவன்தான் அல்லாஹ் – படைக்கிறவன்: (படைப்பினங்களை) ஒழுங்குபடுத்துகிறவன், உரு அமைக்கிறவன் – அவனுக்கு அழகிய திருப்பெயர்கள் இருக்கின்றன, வானங்களிலும் பூமியிலும் உள்ளவை (அனைத்தும்) அவனைத் தஸ்பீஹ் செய்கின்றன: அவன் (யாவற்றையும்) மிகைத்தவன்: ஞானமுள்ளவன்.