Sign-Up  |  Log-In








MAIL OF ISLAM
The Path to Paradise
© Copyright 2008-2013 www.mailofislam.com all rights reserved. Mail of Islam™ is trademark of Mail of Islam Organization.
சூரத்துல் புரூஜ் – 85  (கிரகங்கள்)
(மக்கீ)  பிரிவு - 1,  சொற்கள் – 109,  வசனங்கள் – 22,  எழுத்துகள் – 465


அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்......

1. கிரகங்களுடைய வானத்தின் மீது சத்தியமாக!

2. வாக்களிக்கப்பட்ட (கியாமத்து) நாளின் மீது சத்தியமாக!

3. சாட்சியாய் அமைந்துள்ள (ஜும்ஆ தினத்)தின் மீதும், சாட்சி சொல்லப்படுகின்ற (அரபாத் தினத்)தின் மீதும் சத்தியமாக!

4. அகழ் (நெருப்புக்குண்ட) வாசிகள் சபிக்கப்பட்டனர்.

5. எரிபொருளுடைய நெருப்பு (க் குண்டம்) –

6. அவர்கள் அதனருகில் உட்கார்ந்திருந்த போது –

7. முஃமீன்க(ளை நெருப்புக் குண்டத்தில் இட்டு அவர்க)ளுடன் இவர்கள் நடந்து கொண்டதற்கு இவர்களே சாட்சியாளர்கள்.

8. (யாவற்றையும்) மிகைத்தோனும், புகழுக்குரியவனுமாகிய அல்லாஹ்வின் மீது முஃமின்களாகிய) அவர்கள் ஈமான் கொண்டதற்காகவே அன்றி (வேறு எதற்கும்) அவர்களை அ(ந்த அகழ் தோண்டிய) வர்கள் பழிவாங்கவில்லை.

9. அவன் எத்தகையவனென்றால், அவனுக்கே வானங்கள், பூமியின் ஆட்சி சொந்தமானது: அல்லாஹ் – எல்லாப் பொருட்களின் மீதும் சாட்சியாளன்.

10. நிச்சயமாக எவர்கள் முஃமினான ஆண்களையும், முஃமினான பெண்களையும் துன்புறுத்தி, பிறகு (அதற்காக) தவ்பாச் செய்யவில்லையோ, அத்தகையோர் அவர்களுக்கு நரக வேதனையுண்டு: இன்னும் அவர்களுக்கு கரிக்கும் வேதனையும் உண்டு.

11. நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு நற்செயல்கள் செய்தார்களோ அத்தகையோர் – அவர்களுக்கு அவற்றின் கீழ் ஆறுகள் ஓடுகின்ற சொர்க்கச் சோலைகள் உண்டு: அது மாபெரும் வெற்றியாகும்.

12. நிச்சயாமாக் உம்முடைய ரப்பின் பிடி மிகக் கடினமானதாகும்.

13. நிச்சயமாக அவன்தான் (படைப்புகளை இல்லாமையில் நின்று) துவக்கமாக உண்டாக்கியவன்: (அவற்றின் கால முடிவுக்குப் பின் அவற்றை) அவனே நீள வைக்கிறான்.

14. அவன் மிக்க மன்னிக்கிறவன்: (தனக்கு வழிபடுவோரை) நேசிக்கிறவன் –

15. அர்ஷையுடையவன்: மேனமையுடையவன் –

16. தான் நாடியதைச் செய்து முடிப்பவன்.

17. அந்தப் படைகளின் செய்தி (நபியே!) உமக்கு வந்ததா? –

18. பிர் அவனுடையவும், தமூதுடையவும் (படைகளின் செய்தி.)

19. எனினும், காபிர்கள் பொய்ப்பிப்பதிலேயே இருக்கின்றனர் –

20. அல்லாஹ் அவர்களுக்கு அப்பால் இருந்து சூழ்ந்து கொண்டு இருக்கின்றான்.

21. எனினும், (காபிர்கள் எவ்வளவு மறுப்பினும்) இது மேன்மைக்குரிய குர்ஆனாகும்.

22. பாதுக்காக்கப்பட்ட பலகையில் (எவ்வித மாற்றங்களுக்கும் இடமின்றி பதிவு செய்யப்பட்டு) இருக்கிறது.