Sign-Up  |  Log-In








MAIL OF ISLAM
The Path to Paradise
© Copyright 2008-2013 www.mailofislam.com all rights reserved. Mail of Islam™ is trademark of Mail of Islam Organization.
சூரத்துல் ஃபஜ்ர் – 89  (அதிகாலை)
(மக்கீ)  பிரிவு - 1,  சொற்கள் – 137,  வசனங்கள் – 30,  எழுத்துகள் – 597


அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்......

1. அதிகாலையின் மீது சத்தியமாக! –

2. பத்து இரவுகளின் மீது சத்தியமாக! –

3. இரட்டையின் மீதும், ஒற்றையின் மீதும் சத்தியமாக! –

4. இரவின் மீது – அது (முன், பின்) செல்லும்போது – சத்தியமாக! –

5. அறிவுடையோருக்கு இதில் போதுமான சத்திய (ஆதார)ம் இருக்கிற தல்லவா?

6. (நபியே!) உம்முடைய ரப்பு ஆதுக் கூட்டத்தினரை எப்படிச் செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?

7. பெரும் தூண்களுடைய இராம் (நகர) வாசிகளை –

8. அவர்கள் எத்தகையோரென்றால் – நகரங்களில் அவர்கள் போன்ற வேறெவரும் படைக்கப்படவில்லை.

9. பள்ளத்தாக்கில் பாறைகளைக் குடைந்(து வாசித்த)தவர்களான தமூதையும் –

10. முளைகளுடைய பிர்அவ்னையும் (என்ன செய்தான் என்பதைப் பார்க்கவில்லையா?)

11. அவர்கள் எத்தகையோரென்றால் நகரங்களில் வரம்பு மீறி நடந்தனர் –

12. பின்னர், அவற்றில் அவர்கள் குழப்பத்தை அதிகமாக்கினார்கள் –

13. எனவே, உம்முடைய ரப்பு வேதனை என்னும் சாட்டையினால் அவர்களை அடித்தான்.

14. நிச்சயமாக உம்முடைய ரப்பு (தன அடியானின் ஒவ்வொரு செயற்பாட்டையும்) கண்காணித்துக் கொண்டிருக்கிறான்.

15. எனவே, மனிதன்: அவனுடைய ரப்பு அவனைச் சோதித்து, பிறகு அவனை அவன் கண்ணியப்படுத்தி, அவனுக்கு அவன் பாக்கியமளித்தால், அப்பொழுது “என்னுடைய ரப்பு என்னை கண்ணியப்படுத்தி விட்டான்” என்று அவன் கூறுகிறான்.

16. (அவ்வாறின்றி) அவனை – (மனிதனை, ரப்பாகிய) அவன் சோதித்து, பிறகு அவனுடைய உணவை அவன் மீது நெருக்கடியாக்கினால், அப்போது “என்னுடைய ரப்பு என்னை இழிவு படுத்திவிட்டான்” என்று கூறுகிறான்.

17. அவ்வாறல்ல! எனினும், நீங்கள் அநாதையை கண்ணியப்படுத்துவதில்லை –

18. ஏழைக்கு உணவளிக்க நீங்கள் தூண்டுவதுமில்லை –

19. (அன்றியும் பிறருடைய) அநந்தரச் சொத்துகளை முற்றிலுமாகத் தின்றுவிடுகிறீர்கள் –

20. இன்னும், பொருளை அதிகமான விருப்போடு நேசிக்கிறீர்கள்.

21. அவ்வாறல்ல! பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும்போது –

22. உம்முடைய ரப்பு(டைய ஆணையு)ம், மலக்குகளும் அணியணியாக வரும்போது.

23. அந்நாளில் நரகம் கொண்டு வரப்படும்போது, மனிதன் அந்நாளில் (தான்) உணர்வு பெறுவான் – அந்த உணர்வு எவ்வாறு அவனுக்கு(ப் பலன் உள்ளதாக) ஆகும்?

24. “என்னுடைய (மறுமை) வாழ்விற்காக (நன்மைகளை) நான் முற்படுத்தி வைத்திருக்க வேண்டுமே! என்று அவன் கூறுவான்.

25. எனவே, அந்நாளில் அவன் (அல்லாஹ்) வேதனை செய்வதைப்போல் ஒருவரும் வேதனை செய்ய மாட்டார் –

26. இன்னும் அவன் (குற்றவாளிகளைக்) கட்டுவதுபோல் ஒருவரும் கட்டவும் மாட்டார்.

27. (அன்று நல்லடியார்களை நோக்கி) “சாந்தி பெற்ற ஆத்மாவே!

28. “(அல்லாஹ்வைப்) பொருந்திய நிலையிலும் (அவனால் நீ) பொருந்திக் கொல்லப்பட்ட நிலையிலும், உன்னுடைய ரப்பின்பால் நீ மீளுவாயாக!” (என்றும்)

29. “என்னுடைய நல்லடியார்களில் நீ சேர்ந்து கொள்வாயாக!”

30. “இன்னும் என்னுடைய சொர்க்கத்தில் நீ புகுவாயாக!” (என்றும் சொல்லப்படும்.)