MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
தன்னை தானே சுய விசாரணை செய்வது எப்படி?
எழுதியவர்: மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.
இஸ்லாத்தின் பார்வையில் முஹாஸபதுன் நப்ஸ் எனும் தன்னை தானே சுயவிசாரணை செய்வது எப்படி?
♣ முஹாஸபதுன் நப்ஸ் என்றால் என்ன?
ஒவ்வொரு முஸ்லிமான ஆணும் பெண்ணும் பின்வரும் கேள்விகளைத் தன்னிடம் தானே கேட்டு அவற்றுக்கு விடை காண முயல்வது ஒவ்வொருவரது வாழ்க்கையையும் வெற்றிகரமாக அமைத்துக்கொள்ள ஏதுவாக அமையும்.
இவ்வாறு தன்னைத் தானே சுயவிசாரிப்பது இஸ்லாமியப் பரிபாஷையில் முஹாஸபதுன் நப்ஸ் என்று அழைக்கப்படுகிறது.
♦இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்” நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொரு வரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளராவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன், தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டாருக்கும், அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். ஒருவரின் பணியாள் தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்.
நூல்: புகாரி 7138
♦ ஹழ்ரத் உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள், நீங்கள் விசாரிக்கப்பட முன்னர் உங்களை நீங்களே விசாரித்துக் கொள்ளுங்கள், நீங்கள் கணிப்பிட்டு பார்க்கப்பட முன் உங்களை நீங்களே கணிப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று குறிப்பிட்ட உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் தன்னைத்தானே விசாரித்துக் கொள்வதுடன் தனக்குத்தானே தண்டனையையும் விதித்துக் கொண்டுள்ள வரலாற்று சிறப்புமிக்க செய்திகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
♣ முஹாஸபதுன் நப்ஸ் எனும் சுயவிசாரணை செய்வது எப்படி?
முஹாஸாதுன் நப்ஸ் எனும் சுயவிசாரணை செய்வது இஸ்லாத்தில் உள்ள விடயம் ஒன்றாகும். இந்த வகையில் எம்மை நாமே திருத்திக் கொள்ள பின்வரும் கேள்விகளை எம்மிடம் நாமே கேட்டுக் கொள்ள முயற்சிப்போமாக! சுவனத்தை ஆவல் கொண்டுள்ள எமக்கு இது ஒரு நல்ல வழிகாட்டலாக அமையும்.
கிழமைக்கு ஒரு முறை அல்லது தினமும் பள்ளியில் இந்தக் கிழமை முழுவதும் சுபஹ் தொழுகையை ஜமாஅத்தோடு நிறைவேற்றினாயா? உரிய நேரத்தில் தொழுதாயா?, பர்ளுத்தொழுகைகளுக்கு முன்பின் உள்ள சுன்னத்துத் தொழுகைகளைத் தொழுதாயா?, இந்தக் கிழமையில் குர்ஆன் ஓதி வந்தாயா? மனனம் செய்தாயா?, மவ்த்து, மறுமைபற்றி சிந்தித்தாயா? கண்ணீர் விட்டு அழுதாயா?, நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறினார்கள்: “யார் சுவர்க்கத்தை மும்முறை வேண்டுகிறாரோ சுவர்க்கம் அவர்ரைத் தன்னில் நுழைத்து விடுமாறு வேண்டுகிறது. யார் நரக விடுதலையை வேண்டுகிறாரோ நரகம் அவரை தன்னில் நுழைக்காதிருக்கும் படி வேண்டுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்கள். இதற்கமைய உன் பிரார்த்தனை அமைந்திருந்ததா?
உனது நண்பர்களுடன் எவ்வாறு நடந்து கொண்டாய், தீய நண்பர்களை விட்டும் ஒதுங்க நினைத்தாயா? பாவமன்னிப்பு கேட்டாயா? இஸ்திஃபார் செய்தாயா? தூய்மையான உள்ளத்துடன் இறைபாதையில் மரணத்தைச் சந்திக்க அல்லாஹ்விடம் பிராத்தித்தாயா? பொறாமை, கர்வம் போன்றன உனது உள்ளத்தில் தோன்றாதவாறு உள்ளத்தை பார்த்துக் கொண்டாயா? பொறாமை, முகஸ்துதி, குரோதம் போன்ற தீய உணர்வுகளிலிருந்தும், பொய்யுரைத்தல், கோள், வீண்வாதம், வீண்கேளிக்கைகள் போன்ற தீய உணர்வுகளிலிருந்தும் உன்னை, உனது உள்ளத்தை பாதுகாத்து கொண்டாயா?
மேலும் நீ உண்ணும் உணவு, உடுக்கும் உடை, அருந்தும் பானங்கள் போன்ற இன்னோரன்ன அம்சங்களில் அல்லாஹ்வை பயந்து கொண்டாயா? உன் தாய், தந்தையருக்கு நன்றியுடையவனாக இருக்க வேண்டுமென்ற வகையில் அவர்களுக்காகப் பிராத்தித்தாயா? நண்பர்கள், உறவினர்களுக்காகவும் பிராத்தனை செய்தாயா? அல்லாஹ்வுடைய பாதையில் உனது பணத்தில் இருந்து செலவளித்தாயா? எவ்வளவு செலவளித்தாய்? நன்மையை ஏவி தீமையைத் தடுப்பதில் எவ்வளவு தூரம் பங்கு கொண்டாய்? உனது பொழுது போக்கு எவ்வாறு இருந்தது? அல்லாஹ் திருப்திப்படும்விதத்தில் அவை அமைந்திருந்ததா?
மேலும் உனது வீட்டு அங்கத்தவர்களுடன் எவ்வாறு நடந்து கொண்டாய்? பெற்றோர்கள், பிள்ளைகள், சகோதரர்களுடன் நட்புடன் நடந்து கொண்டாயா? எத்தனை முறை இஸ்திஹ்பார் செய்தாய்? உனது நாவு எத்தனை தடவை ஸூப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹூ அக்பர் என்று உரைத்தது? இறைவனைப் புகழும் போது அவனது படைப்புக்களைப் பார்க்கும் போதும் உனது மனநிலை எவ்வாறிருந்தது? அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினாயா? உன்னை விட அறிவில், அழகில் உடலமைப்பில் உயர்ந்தவர்களை, தாழ்ந்தவர்களைக் கண்ட போது அல்லாஹ் உனக்கருளிய அருளையிட்டு அவனுக்குநீ நன்றி செலுத்தினாயா? நீ செய்த தீய செயல்களை நினைத்து வருந்தி மீண்டும் அதனை செய்யமாட்டேன் என்று உறுதி பூண்டு அல்லாஹ்விடம் தௌபாச் செய்தாயா? உரிய நேரத்தில் உரிய கடமைகளைச் செய்தாயா? வாக்களித்தபடி நடந்துகொண்டாயா? உரிய நேரத்தில் சமூகம் அளிக்கத்தவறி பிறருக்கு அசௌகரியம் ஏற்படுத்தினாயா?
இது போன்ற கேள்விகளைத் தன்னிடம் தானே கேட்டு விசாரித்துக் கொள்வதுடன் தன்னில் காணப்படும் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ள முயல வேண்டும். அதனை வழக்கமாக செய்து வரும் பொழுது குறைகள் நீங்க ஏதுவாகும். அவ்வாறே அல்லாஹ்வின் திருப்திக்குப் பொருத்தமானவர்களாகவும் நாம் அமையலாம்.
♣ மறுமை நாளில் நமக்கு எதிராக நமது உடல் உறுப்புகள் அல்லாஹ்விடம் சாட்சி கூறும்
நாம் செய்யும் செயல்கள் யாருக்கும் தெரியாது என்று பலரும் பல்வேறு காரியங்களில் ஈடுபடுகிறார்கள். திரை மறைவில் தைரியமாக தப்பும் தவறுமான காரியங்களில் இறங்குகிறார்கள். இத்தகையவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். எந்தக் கை, கால்களை வைத்து தீயகாரியங்களைச் செய்கிறார்களோ அவை மறுமையில் தாங்கள் செய்த காரியங்களைப் பற்றி பேசும்.
உலகில் நாம் நினைப்பது போன்று பேசுவதற்கு நாவைப் பயன்படுத்துகிறோம். மறுமையிலோ நாக்கு உலகில் தான் பேசியவற்றை எல்லாம் வெளிப்படுத்தும். நாம் நல்ல காரியங்களைச் செய்தவர்களாக இருப்பின் நமது உடல்களும் நல்ல வகையில் சாட்சியமளிக்கும். கெட்ட காரியங்களை செய்திருப்பின் கெட்ட விதத்தில் சாட்சியமளிக்கும்.
♦ நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள். “இரண்டு கண்களும் விபச்சாரம் செய்கின்றன, இரண்டு கைகளும் விபச்சாரத்தில் ஈடுபடுகின்றன, இரண்டு கால்களும் விபச்சாரத்தில் ஈடுபடுகின்றன, மர்ம உருப்போ அதனை உண்மைப்படுத்துகிறது அல்லது பொய்ப்படுத்துகிறது.”
நூல்: அஹ்மத் 10490
♦ எதைப்பற்றி உமக்கு(த் தீர்க்க) ஞானமில்லையோ அதை(ச் செய்யத்) தொடரவேண்டாம்; நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலனும், பார்வையும், இருதயமும் இவை ஒவ்வொன்றுமே (அதனதன் செயல் பற்றி) கேள்வி கேட்கப்படும். (அல்குர்ஆன் : 17:36)
♦ இதுவே உங்களுக்கு எச்சரிக்கப்பட்ட நரகம். "நீங்கள் (ஏக இறைவனை) மறுத்துக் கொண்டிருந்ததால் இன்று இதில் கருகுங்கள்!'' என்று கூறப்படும். இன்றைய தினம் அவர்களின் வாய்களுக்கு முத்திரையிடுவோம். அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவர்களின் கைகள் நம்மிடம் பேசும், கால்கள் சாட்சி கூறும். (அல்குர்ஆன் 36:63,65)
♦ அவர்களின் நாவுகளும், கைகளும், கால்களும் அவர்களுக்கு எதிராக அவர்கள் செய்தவை குறித்து சாட்சியமளிக்கும். அன்றைய தினம் அவர்களது உண்மையான கூலியை அவர்களுக்கு அல்லாஹ் கொடுப்பான். அல்லாஹ் உண்மையானவன்; தெளிவு படுத்தக்கூடியவன் என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள். (அல்குர்ஆன் 24:24, 25)
♦ அல்லாஹ்வின் பகைவர்கள் நரகை நோக்கித் திரட்டப்படும் நாளில் அவர்கள் வகைப்படுத்தப்படுவார்கள். முடிவில் அவர்கள் அங்கே வந்ததும் அவர்களுக்கு எதிராக அவர்களின் செவியும், பார்வைகளும், தோல்களும் அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி சாட்சி கூறும். "எங்களுக்கு எதிராக ஏன் சாட்சி கூறினீர்கள்?'' என்று அவர்கள் தமது தோல்களிடம் கேட்பார்கள்.
"ஒவ்வொரு பொருளையும் பேசச் செய்த அல்லாஹ்வே எங்களையும் பேசச் செய்தான். முதல் தடவை அவனே உங்களைப் படைத்தான். அவனிடமே திரும்பக் கொண்டு வரப்பட்டுள்ளீர்கள்!'' என்று அவை கூறும். உங்கள் செவியும், பார்வைகளும், உங்கள் தோல்களும் உங்களுக்கு எதிராக சாட்சியம் அளிக்காமலிருக்க (அவற்றுக்குத் தெரியாமல்) நீங்கள் மறைத்ததில்லை. நீங்கள் செய்தவற்றில் அதிகமானவற்றை அல்லாஹ் அறிய மாட்டான் என்று நினைத்தீர்கள். இதுவே உங்கள் இறைவனைப் பற்றி உங்களது எண்ணம். அது உங்களை அழித்து விட்டது. எனவே நஷ்டமடைந்தோரில் ஆகிவிட்டீர்கள்.(அல்குர்ஆன் 41:19-23)
♦ இறையில்லம் (கஅபாவிற்கு) அருகில் குறைஷியரில் இருவரும் ஸகீஃபியரில் ஒருவரும் (ஆக மூன்று பேர் ஓரிடத்தில்) ஒன்றுகூடினர். அவர்களின் வயிறுகள் கொழுப்பு நிறைய இருந்தது. இதயங்கள் சிந்தனை குறைவாக இருந்தது. அவர்கள் ஒருவர்,"நாம் பேசுவதை அல்லாஹ் கேட்கிறான் என்று நீங்கள் கருதுகின்றீர்களா?'' என்று கேட்டார். மற்றொருவர், "நாம் சப்தமாகப் பேசினால் அவன் கேட்கின்றான். நாம் இரகசியமாகப் பேசினால் அவன் கேட்பதில்லை'' என்று பதிலளித்தார்.
(அவர்களில்) இன்னும் ஒருவர், "நாம் சப்தமிட்டுப் பேசும்போது அவன் கேட்பானெனில் நாம் இரகசியமாகப் பேசும் போதும் அவன் கேட்கத்தான் செய்வான்'' என்று கூறினார். அப்போது அல்லாஹ், "உங்கள் செவியும், பார்வைகளும், உங்கள் தோல்களும் உங்களுக்கு எதிராக சாட்சியம் அளிக்காமலிருக்க (அவற்றுக்குத் தெரியாமல்) நீங்கள் மறைத்ததில்லை'' எனும் வசனங்களை (அல்குர்ஆன் 41:22) அருளினான்.
அறிவிப்பவர்: ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு
நூல்: புகாரி 4817
ஆகவே முஹாஸபதுன் நப்ஸ் எனும் தன்னை தானே சுயவிசாரணை நடத்தி ஏழு நப்ஸூடன் யுத்தம் செய்து நப்ஸ் அம்மாராவில் உள்ள தன்மைகளை விட்டு முற்றும் நீக்கம் பெற்று, லவ்வாமாவிலுள்ள சுயநலம் தற்பெருமை, எடுத்துக் காட்டுதல். என்ற விஷயங்களை விட்டும் நீங்கி பச்சாதாபம், சிந்தனை முல்ஹிமாவில் உள்ள தர்ம சிந்தை, உள்ளத்தைக் கொண்டு போதுமாக்குதல், கல்வி பாவமன்னிப்பு கோருதல், பொறுமை, சேவை உணர்வு முத்மயின்னாவில் உள்ள தவக்குல் சகிப்புத்தன்மை, வணக்கவழிபாடு, நன்றியுணர்வு, திருப்தி.
ராளியாவில் உள்ள பற்றற்ற வாழ்க்கை, மனத்தூய்மை பேணுதல், தேவையற்றதை விட்டும் ஒதுங்கிக் கொள்ளுதல், வாக்குறுதியை காப்பற்றுதல், மர்ளியாவிலுள்ள நற்குணம், அல்லாஹ்வுக்காகவே வாழ்வது, கிருபைகாட்டுதல், அல்லாஹ்வின் அண்மையை அடைய முயலுதல்.அல்லாஹ்வின் ஆற்றல் குறித்து ஆய்வு செய்தல், அல்லாஹ்வின் களாவை முழுசாக பொறுந்திக் கொள்ளுதல்.
இவ்வாறு நப்ஸின் முந்திய ஆறு வகைகளையும் கடந்து, நப்ஸூடன் யுத்தம் செய்து, வெற்றி கொண்டு காமிலா என்ற ஏழாவது நப்ஸின் தன்மைகளை முழுமையாக அடைந்து கொண்டவர்கள் தான் குதுபுக்கள் (ஹெளதுகள்) முக்தார்கள், அவ்த்தாதுகள், அன்வார்கள், உரஃபாக்கள், அக்பார்கள், புதலாக்கள், நுஜபாக்கள், நுகபாக்கள், எனும் அவ்லியாக்கள்.
எனவே நமது உடல் உறுப்புகள், இவர் குர்ஆன் படித்தார், பள்ளிவாசலுக்குச் சென்றார் என்று நல்ல செய்திகளைக் கூறவேண்டுமா? அல்லது இவர் புறம் பேசினார் என்று தீய தகவல்களைத் தெரிவிக்க வேண்டுமா? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் ஈருலக வெற்றியையும் நஸீபாக்குவானாக! மனிதனின்வெற்றி அல்லாஹ்வின் திருப்தியிலே தங்கியிருக்கிறது.
எமது அமல்கள் அல்லாஹ்வுக்காக என்ற தூய எண்ணத்தில் அமைய அல்லாஹ்விடம் நாம் பிராத்திப்பேமாக! மரணம் நிச்சயம் இடம் பெறுகின்ற ஒன்று அது எங்கு எப்போது எவ்வாறு இடம்பெறும் என்பதை அல்லாஹ் அறிவான். எந்த நேரத்திலும் தயாராக இருக்கவே வேண்டும் எம்மை நாமே சுய விசாரனை செய்வதன் மூலம் எம் தவறை நாமே திருத்தி அல்லாஹ்வின் திருப்தியையும் மன்னிப்பையும் பெற்ற நன்மக்களாக எம்மை அமைத்துக் கொள்ள உறுதி கொள்வோமாக! ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.
ஸுபிஸம் என்றால் என்ன? சூபிசம் போதிப்பது என்ன? சூபிகள் என்றால் யார்? சூபித்துவத் தரீக்காக்கள் பற்றிய அறிமுகம் ஆகியவற்றை அறிந்து கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.
உள்ளத்தை தூய்மைப்படுத்துவது எப்படி?
தஸ்கியதுன் நப்ஸ் எனும் (உள்ளத்தை) பரிசுத்தப்படுத்துவது, தூய்மைப்படுத்துவது எப்படி? என்பதை விளங்கிக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.
மனிதன் என்றால் யார்? மகான் என்றால் யார்? என்பதை விளங்கிக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.
தன்னை அறிவதற்கு முதல் படி என்ன? என்பதை அறிய இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் எழுதிய இந்த சிறு கட்டுரையை வாசியுங்கள்.