MAIL OF ISLAM

Knowledge & Wisdom



வித்ர் தொழுகை


ஜமாஅத்துடன் தொழுவது விதியாக்கப்படாத ஸுன்னத்துத் தொழுகைகளில் மிக ஏற்றமானது வித்ரு தொழுகையாகும். இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்களின் ஆய்வின்படி வித்ரு தொழுகை வாஜிபாகும். இமாம் ஷாபியீ (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்களின் ஆய்வின்படி வித்ரு தொழுகை சுன்னத்தாகும்.


எப்போது தொழ வேண்டும்?

அதனுடைய நேரமாகிறது, இஷா தொழுதபின் அதிகாலை ஸுபுஹ் சாதிக் (மெய் வெள்ளை) ஏற்படுகிற நேரம் வரையிலாயிருக்கும்.


இரவின் கடைசி நேரத்தில் தொழுவது மிக்க உசிதமானது. ஃபஜ்ருக்கு முன் விழித்து (இரவின் கடைசி நேரத்தில்) வித்ரு தொழ முடியும் என்று நம்பிக்கையுள்ளவர், வித்ரை இரவின் கடைசியில் பிற்படுத்தித் தொழுவது சுன்னத்தாகும். ரமழானில் இவ்வாறு தொழுவதால் ஜமாஅத்து தவறிவிட்டாலும் சரியே.


ஒருவர் இஷாவுக்குப் பின் வித்ரு தொழுதுவிட்டுத் தூங்கி, பிறகு தஹஜ்ஜுதுக்கு எழுந்து அதனைத் தொழுதபின் மீண்டும் வித்ரைத் தொழுவது சுன்னத்தல்ல. ஆனால், தஹஜ்ஜுதுடைய எண்ணத்தில் அதனை மீண்டும் தொழுதால் அது நஃபிலாகி விடும். எனினும் மீண்டும் வித்ரைத் தொழுவது சுன்னத்தல்ல என்பதை அறிந்து கொண்டே மனமுரண்டாகத் திரும்பத் தொழுதால் அத்தொழுகை பாத்திலாகிவிடும்.


அபூபக்கர் ஸித்தீக் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் வித்ரு தொழுது விட்டுத் தூங்கி, பிறகு எழுந்து தஹஜ்ஜுத் தொழுவார்கள். உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் தூங்கி எழுந்து வித்ரு தொழுதுவிட்டுப் பின் தஹஜ்ஜுத் தொழுவார்கள். இவ்விருவரும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களிடம் இவ்விஷயத்தைக் கூறிய பொழுது “அபூபக்கர் நற்கருத்தை எடுத்துக் கொண்டார். உமர் தன் சக்தியைப் பயன்படுத்திக் கொண்டார்” என்று கூறினார்கள்.


உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அபூபக்கர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களைப் போன்றும், அலீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் உமர் (ரலியல்லாஹு அன்ஹு), அவர்களைப்போன்றும் செய்து வந்தார்கள். இமாம் ஷாஃபியீ (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் அபூஅக்கர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களைப் போன்று செய்து வந்தார்கள்.



எத்தனை ரக்அத்து தொழ வேண்டும்?

வித்ரில் குறைந்தது ஒரு ரக்அத்: மிகக் கூடுதலானது பதினொரு ரக்அத்துகள்.

நிரப்பத்தில் தாழ்ந்தது மூன்று ரக்அத்துகள்; அதைவிட நிரப்பமானது ஐந்து ரக்அத்துகள்; அதைவிட நிரப்பமானது ஏழு ரக்அத்துகள்; அதைவிட நிரப்பமானது ஒன்பது ரக்அத்துகள்; அதைவிட நிரப்பமானது பதினொரு ரக்அத்துகள்.


வித்ருடைய எண்ணத்தில் பதினொரு ரக்அத்துகளை விட அதிகப்படுத்துவது கூடாது. இத்தனை ரக்அத்துகள்தான் தொழுவேன் என்று ஆரம்பத்திலேயே குறிப்பாக்க வில்லையானாலும் பதினொரு ரக்அத்துகள் வரை தொழலாம். இத்தனை ரக்அத்துகள் தொழுவேன் என்று ஆரம்பத்தில் குறிப்பாக்கியவர் பிறகு அதிகப்படுத்த நாடினால் முன் குறிப்பாக்கிய ரக்அத்துகள் முடிந்தபிறகு அதிகமானதைத் தொழுவதற்கு எழும் முன் அதிகப்படுத்துவதை நிய்யத்துச் செய்து கொள்ளவும். குறைக்க நாடுகிறவன் அத்தஹியாத்தில் உட்காரும் முன் நிய்யத்துச் செய்து கொள்ளவும்.



எப்படி நிய்யத்து வைக்க வேண்டும்?

♣ வித்ரு இரண்டு ரக்அத்தின் தக்பீர்:

"உஸல்லி ஸலாதல் வித்ரி ரக்அத்தைனி முஸ்தக்பிலன் இலல் கஃபதி ஷரிfபதி லில்லாஹி தஆலா அல்லாஹு அக்பர்"


“சுன்னத்தான வித்ர் தொழுகையின் இரண்டு ரக்அத்துகளையும் கிப்லாவை முன்னோக்கி அல்லாஹ்வுக்காகத் தொழுகிறேன் அல்லாஹு அக்பர்” என்பதாகும்.


♣ வித்ரு ஒற்றை ரக்அத்தின் தக்பீர்:-

உஸல்லி ஸலாதல் வித்ரி ரக்அதன் முஸ்தக்பிலன் இலல் கஃபதி ஷரிfபதி லில்லாஹி தஆலா அல்லாஹு அக்பர்.


“சுன்னத்தான வித்ர் தொழுகையின் ஒரு ரக்அத்தை கிப்லாவை முன்னோக்கி அல்லாஹ்வுக்காகத் தொழுகிறேன் அல்லாஹு அக்பர்” என்பதாகும்.



எப்படி தொழ வேண்டும்?

சாதாரணமாக  ஐந்து நேர தொழுகையை தொழுவது போன்றே இதனையும் தொழவேண்டும்.  ஆனால், இரண்டு இரண்டு ரக்அத்துகளாக ஸலாத்துடன் தொழுதுவிட்டு கடைசி ஒரு ரக்அத்தை தனி ஸலாத்தில் தொழுவது ஏற்றமானது. மற்ற தொழும் முறை, ஓதல்கள் அனைத்தும் வழமை போன்றதே.


மூன்று ரக்அத் தொழ நாடியவர், முதல் ரக்அத்தில் சூரா பாத்திஹா ஓதிய பின்னர் “ஸப்பிஹிஸ்ம” சூராவும், இரண்டாவது ரக்அத்தில் “குல்யா அய்யுஹல் காஃபிரூன்” சூராவும், மூன்றாவது ரக்அத்தில் குல்ஹுவல்லாஹு, குல் அஹூது பிரப்பில் ஃபலக், குல் அஹூதுபிரப்பின் நாஸ் ஆகிய சூராக்களும் ஓதுவது சுன்னத்து.  அதிகம் தொழ நாடியவர் பிந்திய மூன்று ரக்அத்துகளில் மேற்கூறப்பட்ட சூராக்களை ஓதுவது சுன்னத்து.



ஸலாம் கொடுத்ததும் என்ன ஓத வேண்டும்?

ஸுப்ஹான மலிக்கில் குத்தூஸ் என்று மூன்று தடவை சொல்லிக் கொள்ள வேண்டும். மூன்றாவது தடவை சத்தத்தை உயர்த்திக் கூற வேண்டும்.



ரமலானில் வித்ரில் குனூத் ஓதுதல்

ரமலான் மாதத்தில் பிந்திய பதினைந்தில் வித்ர் தொழுகையில் ருகூஃ இற்கு பின்னர் நிமிர்ந்து, நிலையில் குனூத் ஓதுவது சுன்னத்தாகும். குனூத் ஓத மறந்தால் ஸஜ்தா ஸஃவு (மறதிக்கான ஸுஜூது) செய்ய வேண்டும். முந்திய பதினைந்தில் வித்ர் தொழுகையில் ருகூஃ இற்கு பின்னர் குனூத் ஓதுவது மக்ரூஃ (வெறுக்கத்தக்கது) ஆகும்.


மேலும் பல தொழுகை முறைகளை எமது இணையத்தளமான www.mailofislam.com இல் கற்று கொள்ளுங்கள்.

                                        மேலும் படியுங்கள் - தெரியாதவர்களுடன் பகிருங்கள்


தராவீஹ் தொழுகை தொழுவது எப்படி?


தஸ்பீஹ் தொழுகை தொழுவது எப்படி?


தஹஜ்ஜுத் தொழுகை தொழுவது எப்படி?